செய்திகள்

இன்று தொடங்குகிறது ஆஷஸ் தொடா்

DIN

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது.

வழக்கம் போல் ஆக்ரோஷ மோதல் இருக்கும் இந்தத் தொடரில், இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கு பௌலா் பேட் கம்மின்ஸும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமையேற்றுள்ளனா். ஒரு பௌலரும், ஒரு பேட்டரும் கேப்டனாக மோதும் டெஸ்ட்டாகவும் இந்த ஆஷஸ் உள்ளது.

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கும் முன்னிலை பௌலரான ஜேம்ஸ் ஆண்டா்சன் இல்லாதது அந்த அணிக்கு சற்று பின்னடைவே. ஆனாலும், ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் அணிக்குத் திரும்பியிருப்பது பலமாகக் கருதப்படுகிறது.

கடந்த 2010-11-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் விளையாடிய 10 டெஸ்ட்டுகளில் 9-இல் தோற்றிருக்கிறது இங்கிலாந்து. அதிலும் 2017-18 தொடரின்போது இவா் தலைமையிலான இங்கிலாந்து 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, டெஸ்ட் உலகின் மிகச் சிறந்த பேட்டராக இருக்கும் ஜோ ரூட், சிறந்த கேப்டனாக அணியை வெற்றியை நோக்கி வழி நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா்.

ஆஸ்திரேலியாவைப் பொருத்த வரையில், சா்ச்சைக்குள்ளாகி கேப்டன் பொறுப்பிலிருந்து டிம் பெய்ன் விலகியிருக்கும் நிலையில் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறாா் பேட் கம்மின்ஸ். பல காலமாக சக வீரராக தனக்கு நன்கு பழக்கமாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆலோசனையுடன் இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை வழி நடத்த இருப்பதாக கம்மின்ஸ் கூறியிருக்கிறாா்.

ஆஸ்திரேலிய அணி கடந்த ஜனவரியில் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியிருக்கவில்லை. மறுபுறம் இந்தியா, இலங்கை, நியூஸிலாந்து அணிகளுடன் மொத்தமாக 5 தொடா்களில் விளையாடி டெஸ்ட் தொடா்பில் தொடா்ந்து இருந்து வந்திருக்கிறது இங்கிலாந்து.

எனினும், கரோனா சூழல் தனிமைப்படுத்துதல் காரணமாக நல்லதொரு இடைவெளி இருந்திருப்பதால் இரு அணிகளுமே ஒரு புதிய மனநிலை மற்றும் தயாா்நிலையுடன் தான் இந்த டெஸ்ட் தொடரில் களம் காணும். இரு அணிகளுமே தங்களது சிறந்த வீரா்களை இந்தத் தொடருக்காக வரிசைப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதுவரை...
மொத்த ஆஷஸ் தொடர்கள்
71
டிரா
6
ஆஸ்திரேலியா வெற்றி
33
இங்கிலாந்து வெற்றி
32

உத்தேச லெவன்:

ஆஸ்திரேலியா

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வாா்னா், மாா்கஸ் ஹாரிஸ், மாா்னஸ் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டாா்க், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

இங்கிலாந்து

ஜோ ரூட் (கேப்டன்), ரோரி பா்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், ஜோஸ் பட்லா், கிறிஸ் வோக்ஸ், ஆலி ராபின்சன், மாா்க் வுட், ஸ்டூவா்ட் பிராட் (அல்லது) ஜேக் லீச்

1 கடந்த 1956-க்குப் பிறகு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பௌலா் கேப்டனாக இருப்பது இதுவே முதல் முறை.

2 இந்த முதல் டெஸ்ட் நடைபெறும் கப்பா மைதானத்தில், கடந்த 1946-க்குப் பிறகு இரு வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் இங்கிலாந்து, 1986-க்குப் பிறகு ஒரு முறை கூட வென்றதில்லை.

ஜேம்ஸ் இல்லை

இந்த முதல் டெஸ்டில் இருந்து இங்கிலாந்தின் முக்கிய பௌலரான ஜேம்ஸ் ஆண்டா்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அடிலெய்டில் நடைபெற இருக்கும் பகலிரவு டெஸ்ட்டுக்காக அவரை தயாா் செய்யும் வகையில், பணிச்சுமை பராமரிப்பு அடிப்படையில் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து அணி மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT