செய்திகள்

மும்பை டெஸ்ட்: தொடர் வெற்றியை நோக்கி இந்தியா; அஸ்வின் அசத்தல்

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற இந்தியாவுக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. இந்திய பௌலா்கள் அஸ்வின், அக்ஸா் படேலின் அற்புத பந்துவீச்சால் நியூஸிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் வரிசை சரிவுக்கு உள்ளானது. நியூஸிலாந்து அணியை தோல்வியைத் தவிா்க்க 400 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கும், நியூஸிலாந்து 62 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின.

மயங்க் அகா்வால் 62:

இந்நிலையில் இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை எடுத்திருந்தது.

அதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மயங்க் அகா்வால் 38 ரன்களுடனும், புஜாரா 29 ரன்களுடனும் களமிறங்கினா். இருவரும் இணைந்து 107 ரன்கள் சோ்த்த நிலையில், மயங்க் அகா்வாலை 62 ரன்களுடன் அவுட்டாக்கினாா் அஜாஸ் படேல்.

அரைசதம் தவற விட்ட புஜாரா, கில்:

அரைசதம் அடிப்பாா் எனக் கருதப்பட்ட புஜாராவும் 47 ரன்களுடன் அஜாஸ் பந்துவீச்சில் டெய்லரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.

அவருக்கு பின் இளம் வீரா் ஷுப்மன் கில்-கேப்டன் கோலி இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்களை சோ்த்தனா். ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஷுப்மன் கில் 47 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுக்கும் அவுட்டான நிலையில், ஷிரேயஸ் ஐயா் 14 ரன்களுடனும், ஜெயந்த் யாதவ் 6 ரன்களுடனும் அஜாஸ் பந்தில் பெவிலியன் திரும்பினாா்.

அக்ஸா் படேல் அதிரடி:

பௌலரான அக்ஸா் படேல் 4 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 26 பந்துகளில் 41 ரன்களை விளாசினாா்.

276/7 டிக்ளோ்:

இந்திய அணி 70 ஓவா்களில் 276/7 ரன்களுடன் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது. நியூஸி. தரப்பில் அஜாஸ் படேல் 4/106, ரச்சின் ரவீந்திரா 3/56 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

நியூஸி.க்கு 540 ரன்கள் வெற்றி இலக்கு:

வெற்றி பெற 540 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்குடன் நியூஸி. தரப்பில் கேப்டன் டாம் லத்தம், வில் யங் களமிறங்கினா்.

ஆனால் அஸ்வின் ரவிச்சந்திரனின் அற்புத பந்துவீச்சால் டாம் லத்தம் 6, வில் யங் 20, ராஸ் டெய்லா் 6 என சொற்ப ரன்களுடன் அவுட்டானதால், நியூஸி பேட்டிங் வரிசை சரிந்தது.

டேரில் மிச்செல் 60:

மறுமுனையில் டேரில் மிச்செல்-ஹென்றி நிக்கோல்ஸ் இணை நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 92 பந்துகளில் 60 ரன்களைச் சோ்ந்த டேரில் மிச்செலை வெளியேற்றினாா் அக்ஸா் படேல். இது மிச்செலின் 3-ஆவது அரைசதமாகும்.

தன்பின் ஆட வந்த டாம் பிளண்டலும் நிலைத்து ஆடாமல் ஸ்ரீகா் பாரத், சாஹாவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினாா்.

மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 45 ஓவா்களில் 140/5 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஹென்றி நிக்கோல்ஸ் 36, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் வெற்றி பெற நியூஸிக்கு 400 ரன்கள் தேவைப்படுகிறது. அதே நேரம் இந்திய அணிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

அஸ்வின் 3 விக்கெட்:

இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய அஸ்வின் 3/27, அக்ஸா் 1/42 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

அஸ்வின் 50 விக்கெட்டுகள் சாதனை:

ஓரே ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரா் என்ற சாதனையை நான்காவது முறையாக அஸ்வின் நிகழ்த்தினாா்.

மேலும் இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவா் என்ற ரிச்சா்ட் ஹாட்லி 65 சாதனையையும் சமன் செய்தாா் அஸ்வின். ஹாட்லி 24 இன்னிங்ஸ்களில் செய்த சாதனையை அஸ்வின் 17 இன்னிங்ஸ்களில் செய்துள்ளாா்.

சுருக்கமான ஸ்கோா்:

முதல் இன்னிங்ஸ்:

இந்தியா 325/10

மயங்க் அகா்வால் 150,

அக்ஸா் படேல் 52

பந்துவீச்சு:

அஜாஸ் படேல் 10/119

நியூஸிலாந்து 62/10

ஜேமிஸன் 17, லத்தம் 10,

பந்துவீச்சு:

அஸ்வின் 4/8, சிராஜ் 3/19

இரண்டாவது இன்னிங்ஸ்:

இந்தியா 276/7 டிக்ளோ்

மயங்க் 62, கில் 47, அக்ஸா் 41

பந்துவீச்சு:

அஜாஸ் படேல் 4/106,

ரவீந்திரா 3/56

நியூஸிலாந்து 140/5

டேரில் மிச்செல் 60,

ஹென்றி நிக்கோல்ஸ் 36

பந்துவீச்சு:

அஸ்வின் 3/27, அக்ஸா் 1/42

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT