செய்திகள்

மும்பை டெஸ்டில் அஜாஸ் படேல் சாதனை: 2-ம் நாள் முடிவில் இந்தியா 332 ரன்கள் முன்னிலை!

4th Dec 2021 05:43 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆகியுள்ளது. இதையடுத்து 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109.5 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 150, அக்‌ஷர் படேல் 52 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்துச் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 47.5 ஓவர்கள் வீசி, 119 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜிம் லேகர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக 10 விக்கெட்டுகள் எடுத்த 3-வது பந்துவீச்சாளர் என்கிற சாதனையை அஜாஸ் படேல் படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அற்புதமாகப் பந்துவீசியது. தேநீர் இடைவேளையின்போது, 16.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. இதன்பின்பு, நியூசிலாந்து அணி, 28.1 ஓவர்களில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. அஸ்வின் 4, சிராஜ் 3, அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டுகளையும் ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக வேறு எந்த அணியும் இவ்வளவு குறைவான ஸ்கோரை எடுத்ததில்லை. மேலும் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோரும் இதுதான். 

ADVERTISEMENT

அஜாஸ் படேல்

எனினும் ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்தை மீண்டும் பேட்டிங் செய்ய விராட் கோலி அழைக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்யும் என அறிவிக்கப்பட்டது. 

ஃபீல்டிங் செய்தபோது காயம் ஏற்பட்டதால் ஷுப்மன் கில் களமிறங்கவில்லை. இதனால் மயங்க் அகர்வாலும் புஜாராவும் தொடக்க வீரர்களாக விளையாடினார்கள். இருவரையும் நியூசி. பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. மயங்க் அகர்வால் 6 பவுண்டரிகளும் புஜாரா 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளும் அடித்தார்கள்.

2-ம் நாள் முடிவில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 21 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 38, புஜாரா 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 500 ரன்கள் முன்னிலை பெற்ற பிறகு இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Tags : India wickets
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT