செய்திகள்

மும்பை டெஸ்ட்: 150 ரன்களுக்கு ஆட்டமிழந்த மயங்க், 7 விக்கெட்டுகள் எடுத்த அஜாஸ் படேல்

4th Dec 2021 12:27 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். நியூசிலாந்தின் அஜாஸ் படேல், இந்திய அணியின் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் வெள்ளியன்று தொடங்கியது. காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா என முதல் டெஸ்டில் விளையாடிய மூன்று வீரர்கள் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அவர்களுக்குப் பதிலாக விராட் கோலி, சிராஜ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாகச் செயல்படுகிறார். நியூசி. அணியில் மிட்செல் இடம்பெற்றுள்ளார். 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 120, சஹா 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ADVERTISEMENT

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் மீண்டும் ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஜாஸ் படேல். மும்பை டெஸ்டில் அவர் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சஹா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அஸ்வினை முதல் பந்திலேயே போல்ட் செய்தார் அஜாஸ் படேல். இதனால் 224 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

மயங்க் அகர்வால்

இதன்பிறகு களமிறங்கிய அக்‌ஷர் படேல், மயங்க் அகர்வாலுக்கு நல்ல இணையாக விளங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். 

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 98 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 306 பந்துகளை எதிர்கொண்டு 146 ரன்களும் அக்‌ஷர் படேல் 98 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்து அஜாஸ் படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் 7 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல் வீழ்த்தியுள்ளார். இதனால் அவர் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை புரிவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags : India Mayank Agarwal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT