செய்திகள்

மும்பை டெஸ்ட்: இந்திய அணி வலுவான தொடக்கம்

3rd Dec 2021 01:53 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி, 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக ஆட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்கியது. 

காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா என முதல் டெஸ்டில் விளையாடிய மூன்று வீரர்கள் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அவர்களுக்குப் பதிலாக விராட் கோலி, சிராஜ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாகச் செயல்படவுள்ளார். நியூசி. அணியில் மிட்செல் இடம்பெற்றுள்ளார். 

ADVERTISEMENT

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். 

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஷுப்மன் கில்லும் மயங்க் அகர்வாலும் நியூசிலாந்தின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். ஜேமிசன் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகள் அடித்தார் கில். இருவரும் சுழற்பந்து வீச்சையும் எளிதாகக் கையாண்டார்கள். இதனால் தொடக்கக் கூட்டணியை நியூசி. அணியால் பிரிக்க முடியவில்லை. 

இந்திய அணி, 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால், 34, ஷுப்மன் கில் 35 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

Tags : New Zealand
ADVERTISEMENT
ADVERTISEMENT