செய்திகள்

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா-நியூஸிலாந்து:  இன்று தொடங்குகிறது மும்பை டெஸ்ட்

3rd Dec 2021 10:07 AM

ADVERTISEMENT


மும்பை: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 

இரு ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் டிரா ஆகியிருப்பதால், இந்த ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. 

இந்திய அணியைப் பொருத்தவரை கேப்டன் விராட் கோலி அணிக்குத் திரும்பியிருக்கிறார். அவருக்குப் பதில் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படப்போவது யார் என்ற கேள்வி இருக்கிறது. மோசமான ஃபார்மில் இருக்கும் அஜிங்க்ய ரஹானே அதற்காக பிரதானமாக பரிசீலிக்கப்படலாம். 

அடுத்தபடியாக, சேதேஷ்வர் புஜாராவுக்கான இடம் குறித்தும் யோசிக்கப்படலாம். இருந்தாலும், அந்த அனுபவ வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்து, முதல் ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஷ்ரேயஸ் ஐயருக்கு ஓய்வளிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், 2016-இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் விளாசிய கருண் நாயருக்கே அந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ஒருவேளை மயங்க் அகர்வால் நீக்கப்பட்டவும் வாய்ப்பிருக்கலாம். இதில் எந்த முடிவை ராகுல் திராவிட் - கோலி கூட்டணி மேற்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பௌலிங்கில் உமேஷ் யாதவ் சிறப்பாகச் செயல்படுவதாக அணியின் பௌலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே தெரிவித்திருக்கிறார். 

இஷாந்த் சர்மா தனது பழைய ஃபார்மை எட்ட முடியாத நிலையில் இருக்கிறார். இதனிடையே, இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. 

நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை, லதாம் - யங் கூட்டணி பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுகிறது. பெüலிங்கில், ஜேமிசன், சௌதி அபாரம் காட்டினாலும், காயமடைந்த நீல் வாக்னர் இல்லாமல் போனதன் பாதிப்பை கான்பூர் டெஸ்டிலேயே நியூஸிலாந்து உணர்ந்துவிட்டது. 

இந்த ஆட்டத்தில் ஸ்பின்னர் வில்லியம் சாமர்வில்லுக்கு ஓய்வளித்து, கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. 

ஆடுகளம்...
மும்பையில் தொடர் மழை காரணமாக வெப்பநிலை குறைந்துள்ளது. எனவே ஈரப்பதம் காரணமாக வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என இரண்டுக்குமே சமமானதாக ஆடுகளம் இருக்கலாம் எனத் தெரிகிறது. வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்படலாம் எனத் தெரிவதால், வெற்றி பெற 4 நாள்களில் ஆட்டத்தை முடிக்க வேண்டிய நிலை இரு அணிகளுக்கும் ஏற்படலாம்.

முதல் முறையாக...
இந்த டெஸ்டின்போது வான்கடே மைதானத்தில் ஊடகத்தினருக்காக அவர்களது பிரிவில் ஸ்கோர் குறித்த அறிவிப்பை இரு மகளிர் ஸ்கோரர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு மகளிர் ஸ்கோரர்கள் பங்கேற்பது இது முதல் முறை என மும்பை கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. ஷாமா சனே, சுஷ்மா சாவந்த் என்பவர்களே அந்த இரு ஸ்கோரர்கள் ஆவர்.

அணி விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரித்திமான் சாஹா, கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா. 

நியூஸி.: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லதாம், வில் யங், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோலஸ், டாம் பிளண்டெல், கைல் ஜேமிசன், டிம் செüதி, நீல் வாக்னர், அஜாஸ் படேல், வில்லியம் சாமர்வில், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மிட்செல் சேன்ட்னர்.

வான்கடேவில் டெஸ்ட்... 
வான்கடே மைதானத்தில் கடைசியாக 2016 டிசம்பரில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. 

இந்த மைதானத்தில் டெஸ்ட் விளையாடத் தொடங்கிய பிறகு, இங்கு இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்துக்கு எதிராகத் தான். 1976-இல் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியா 162 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. 

நியூஸிலாந்து கடைசியாக இந்த மைதானத்தில் 1988 நவம்பரில் விளையாடியபோது, இந்தியாவை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 

கரோனா சூழல் காரணமாக மைதானத்தில் 25 சதவீத அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆட்ட நேரம்: காலை 9.30 மணி 
இடம்: வான்கடே மைதானம், மும்பை. 
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

இங்கு இந்தியா...
மொத்த டெஸ்ட்டுகள்: 25
வெற்றி: 11
தோல்வி: 7
டிரா: 7

ADVERTISEMENT
ADVERTISEMENT