செய்திகள்

ஆஷஸ்: புதிய விக்கெட் கீப்பரின் பெயரை அறிவித்தது ஆஸ்திரேலியா

2nd Dec 2021 11:03 AM

ADVERTISEMENT

 

ஆஷஸ் தொடருக்கான புதிய விக்கெட் கீப்பரின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

ADVERTISEMENT

ஆஷஸ் தொடரின் முதல் இரு டெஸ்டுகளில் விளையாடவுள்ள டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இரு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் டிம் பெயின். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிக ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்தார். இதையடுத்து ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வானார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் புதிய விக்கெட் கீப்பர் யாராக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஆஷஸ் தொடரில் முதல் இரு டெஸ்டுகளுக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார். 30 வயது அலெக்ஸ் கேரி, ஆஸ்திரேலிய அணிக்காக 45 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸி. ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் ஆரோன் ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டபோது ஆஸி. அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். 

Tags : Australia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT