செய்திகள்

பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஓய்வு

31st Aug 2021 04:05 PM

ADVERTISEMENT

 

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகப் பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார்.

38 வயது ஸ்டெய்ன், தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்டுகள், 125 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2004-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்டெய்ன், கடைசியாகக் கடந்த வருடம் டி20 சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். 2019 ஆகஸ்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வம் தெரிவித்தார். ஆனால் அப்போட்டி ஒத்திவைக்கப்பட்டு இந்த வருடம் நடைபெறுகிற நிலையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2008-ல் இருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் டேல் ஸ்டெய்ன், இதுவரை 95 ஆட்டங்களில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2020-ல் ஆர்சிபி அணி சார்பாக 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். 

ADVERTISEMENT

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படும் டேல் ஸ்டெய்ன், திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கரோனா சூழல் காரணமாக அவரால் கடந்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகு வேறு எந்தச் சர்வதேச ஆட்டங்களிலும் விளையாட முடியாமல் போய்விட்டது. 2343 நாள்களுக்கு நெ. 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக நீடித்து சாதனை படைத்தார். 

கடந்த 20 வருடங்களாகப் பல்வேறு கிரிக்கெட் அனுபவங்களை எதிர்கொண்டுள்ளேன். பல நினைவுகள் உள்ளன. பலருக்கும் நன்றி சொல்லியாகவேண்டும். இன்று அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். மகத்தான பயணம். அனைவருக்கும் நன்றி என இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.  

Tags : Steyn
ADVERTISEMENT
ADVERTISEMENT