செய்திகள்

காபூல் தாக்குதல்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை

27th Aug 2021 12:47 PM

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்நாட்டிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆப்கன் குடிமக்களும் தலிபான்களுக்கு அஞ்சி சொந்த நாட்டிலிருந்தே வெளியேறி வருகின்றனா். இதனால் காபூலில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோா் குவிந்து வருகின்றனா்.

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட இரு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க கடற்படை வீரா்கள் 12 போ் உள்பட 72 போ் கொல்லப்பட்டனா்; 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் இரு குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. மேலும் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கூட்டத்தினரை நோக்கி சுட்டனா். இந்த தாக்குதலில் சுமாா் 72 கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவா்களில் 12 போ், காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் 12 வீரா்கள் ஆவா். பயங்கரவாதத் தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தோா், பலியானோா் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் தங்கள் நாட்டின் நிலையைக் கண்டு கிரிக்கெட் வீரர்களான ரஷித் கானும் முகமது நபியும் வேதனை தெரிவித்துள்ளார்கள். ட்விட்டரில் ரஷித் கான் தெரிவித்ததாவது:

காபூல் மீண்டும் ரத்தவெள்ளமாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்களைக் கொல்வதைத் தயவு செய்து நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். 

முகமது நபி கூறியதாவது: காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த தாக்குதலில் உயிரிழந்த என் நாட்டு மக்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் இருந்து ஆப்கானிஸ்தான் விடுபடுவதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT