செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகள்-பாகிஸ்தான் டெஸ்ட்: மழையால் 2-ம் நாள் ஆட்டம் ரத்து!

22nd Aug 2021 01:07 PM

ADVERTISEMENT


மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ரிஸ்வான் 22 ரன்களுடனும், ஃபஹீம் அஷ்ரஃப் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கவிருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால் முன்கூட்டியே 11.30 மணிக்கு உணவு இடைவேளை எடுக்கப்பட்டது.

இதையும் படிக்க ராஜஸ்தான் ராயல்ஸில் பட்லரும் இல்லை: இன்னும் எத்தனை வீரர்களை இழக்கப் போகிறது?

ADVERTISEMENT

உணவு இடைவேளைக்குப் பிறகு நடுவர்கள் களத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மிகவும் ஈரமாக இருந்ததால் ஆட முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், தேநீர் இடைவேளை பகல் 2.15 மணிக்கு எடுக்கப்பட்டது. 

தேநீர் இடைவேளைக்குப் பிறகும் நடுவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். எனினும், ஆட முடியாத சூழலே தென்பட்டதால் மாலை 4 மணிக்குப் பிறகு 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இழந்த ஓவர்களை சரி செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அரைமணி நேரம் முன்கூட்டியே ஆட்டம் தொடங்கப்படும், ஒருநாளைக்கு 98 ஓவர்கள் வரை வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : West Indies
ADVERTISEMENT
ADVERTISEMENT