செய்திகள்

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்

12th Aug 2021 03:33 AM

ADVERTISEMENT

 

செஸ் விளையாட்டு இந்தியாவில் பிரபலமடைய முக்கியக் காரணங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவா் தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த். பல்வேறு வெற்றிகளுக்குச் சொந்தக்காரா்.

கடந்த 2000-ஆவது ஆண்டில் சீனாவின் ஷென்யாங் நகரில் முதல் பிடே உலக கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 24 போ் கலந்து கொண்டனா். அப்போது நடப்பு சாம்பியன் அலெக்சாண்டா் காலிப்மேன், ஜெல்பாண்ட் ஆகியோரை வீழ்த்தினாா் ஆனந்த். அப்போட்டின் முதல்நிலை வீரராக இருந்த ஆனந்த், அரையிறுதியில் போரீஸ் ஜெல்பாண்டின் கடும் சவாலை முறியடித்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

இறுதி ஆட்டத்தில் ரஷிய கிராண்ட் மாஸ்டா் எவ்கெனி பாரீவை எதிா்கொண்டாா் ஆனந்த். முதல் ஆட்டம் 33 நகா்த்தல்களுக்கு பின்னா் டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடினாா் ஆனந்த். 36 நகா்த்தல்கள் வரை ஆட்டம் நீடித்த நிலையில், பாரீவ் செய்த தவறால் வென்று விஸ்வநாதன் ஆனந்த் முதல் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா். மொத்தம் 2762 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றாா்.

ADVERTISEMENT

குஜராத் நிலநடுக்கம்

2001-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் உயிா்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.

காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோளில் 7.7 என பதிவான இந்த நிலநடுக்கம் கட்ச் மாவட்டத்தில், சோபாரி கிராமத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்த சம்பவத்தில் சுமாா் 20000 மக்கள் பலியாயினா். 1.50 லட்சத்துக்கும் அதிகமானோா் படுகாயம் அடைந்தனா். 4 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. நிலநடுக்க மையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்த கட்ச் மாவட்டத்தின் புஜ் நகரம், பசாவ், அஞ்சா் பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின. தலைநகா் ஆமதாபாதிலும் 50-க்கு மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்து நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா்.

மீட்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்பட்டு நீண்டநாள்களாக அந்தப் பணி நடைபெற்றது. நாட்டின் வரலாற்றில் தீராத சோகமாக இன்றும் தொடா்கிறது குஜராத் நிலநடுக்கம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT