செய்திகள்

"தொடர் பயிற்சி அளித்தால் ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கும்' 

12th Aug 2021 04:27 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திறமையான வீரர்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டால் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்றார் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் திரும்பிய ஆரோக்கிய ராஜீவ். 
அண்மையில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு தொடரோட்ட தடகளப் போட்டியில் பங்கேற்ற திருச்சி லால்குடி வழுதியூரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ்  புதன்கிழமை சொந்த ஊர் திரும்பினார். அர்ஜுனா விருது பெற்ற இவர் 3 முறை ஆசியப் போட்டிகளிலும், பலமுறை தேசிய போட்டிகளிலும் பதக்கம் வென்றவர். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றவர். 
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று புதன்கிழமை திருச்சி திரும்பிய அவருக்கு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஆரோக்கிய ராஜீவ் கூறியது: 
கரோனா சூழலால் முழுமூச்சில் பயிற்சி பெற முடியவில்லை. ஒலிம்பிக்கில் தகுதி பெறக் கடினப் பயிற்சி மேற்கொண்டோம்; கடும் முயற்சி செய்து சிறந்த பங்களிப்பை அளித்தோம். பதக்கம் பெற முடியவில்லை என்றாலும் ஆசிய அளவிலான சாதனையை படைத்துள்ளோம். 
அடுத்து வரும் உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகளில் நிச்சயம் பதக்கம் கிடைக்கும். அதற்காக பயிற்சி மேற்கொள்வோம். ஒலிம்பிக் போட்டி நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. சிறு சிறு தவறுகளை தவிர்த்திருந்தாலே நேர்த்தியான வெற்றியை அடைந்திருக்க முடியும். அடுத்தமுறை பெரும் வெற்றியை பெறுவோம். 
இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிக வீரர்கள் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு தொடர்ந்து பயிற்சியளித்தால் ஒலிம்பிக்கில் நிச்சயம் வெற்றிகள் கிடைக்கும். தமிழக அரசு எங்களுக்கு அளித்த சலுகைகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றார். 
முன்னதாக இவரை திருச்சி மாவட்ட தடகளச் சங்கச் செயலர் டி.ராஜூ, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், பயிற்சியாளர் லால்குடி ராமச்சந்திரன்,  குடும்பத்தினர், நண்பர்கள், தடகள வீரர்கள் வரவேற்றனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT