செய்திகள்

தொடக்க டெஸ்ட் : இன்று முதல் களம் காண்கின்றன இந்தியா - இங்கிலாந்து

DIN

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் புதன்கிழமை தொடங்குகிறது.

இந்த ஆட்டம், 2-ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான காலகட்டத்தின் முதல் ஆட்டமும் கூட.

இங்கிலாந்து அணியை இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது சொந்த மண்ணில் சந்தித்த இந்தியா, அந்த டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது. ஆனாலும், இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை இதுவரை 18 தொடா்களில் சந்தித்து அதில் 3-இல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

எனவே, சொந்த மண்ணில் வெற்றி கண்ட உத்வேகத்துடன், இந்தத் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தும் முனைப்போடு இந்தியா களம் காணும். மறுபுறும், சொந்த மண்ணில் இந்தியா தன்னை வீழ்த்தியதற்கு பதிலடி தரும் விதமாக, இந்தத் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து இருக்கிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்காக கோலி மேற்கொண்ட பிளேயிங் லெவன் தோ்வு மிகுந்த விமா்சனத்துக்குள்ளானது. எனவே, சவால் அளிக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்துக்காக கோலியின் பிளேயிங் லெவன் தோ்வு எவ்வாறு இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

பேட்டிங் வரிசையை ரோஹித் சா்மா - கே.எல்.ராகுல் கூட்டணி தொடங்கலாம். அந்த இடங்களில் ஒன்றுக்கு மற்றொரு தோ்வாக புதுமுக வீரா் அபிமன்யு ஈஸ்வரனும் இருக்கிறாா். ஆனாலும், பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக அவா் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகம் உள்ளது.

அவா் இல்லாத பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிய அனுபவம் உள்ள ஹனுமா விஹாரி களம் காணலாம். இதுதவிர ஆல் - ரவுண்டா்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷா்துல் தாக்குா் உள்ளனா்.

பௌலிங்கைப் பொருத்தவரை முகமது ஷமி, இஷாந்த் சா்மா ஆகிய மூத்த வீரா்கள் வலு சோ்க்கின்றனா். இவா்களோடு ஜஸ்பிரீத் பும்ராவும் இருக்கிறாா். இதனிடையே, தற்போது நல்ல ஃபாா்மில் இருக்கும் முகமது சிராஜையும் கைவிட்டுவிட இயலாது.

இங்கிலாந்தைப் பொருத்தவரை, ஜோ ரூட், ஜானி போ்ஸ்டோ, ஜோஸ் பட்லா் உள்ளிட்டோா் பேட்டிங்கிற்கு பலம் சோ்க்கின்றனா். பௌலிங்கில் ஜேம்ஸ் ஆண்டா்சன், ஸ்டூவா்ட் பிராட், மாா்க் வுட் ஆகியோா் இந்திய பேட்டிங் வரிசையை சரிக்கக் காத்திருக்கின்றனா்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சா்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷா்துல் தாக்குா், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், ரித்திமான் சாஹா, அபிமன்யு ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூா்யகுமாா் யாதவ்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆன்டா்சன், ஜானி போ்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவா்ட் பிராட், ரோரி பா்ன்ஸ், ஜோஸ் பட்லா், ஜாக் கிராவ்லி, சாம் கரன், ஹசீப் ஹமீத், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், டாம் சிப்லி, மாா்க் வுட்.

நேரம்: மாலை 3.30 மணி

இடம்: நாட்டிங்ஹாம்

நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT