இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 138 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதையும் படிக்க | தேநீர் இடைவேளை: ஷமி மிரட்டல்; இங்கிலாந்து 138/4
தேநீர் இடைவேளை தொடங்கி 4-வது பந்திலேயே புதிதாகக் களமிறங்கிய டேன் லாரன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து 18 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இந்த அதிர்ச்சியிலிருந்து இங்கிலாந்து மீள்வதற்குள் ஷர்துல் தாக்குர் வீசிய 59-வது ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஆலி ராபின்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க | கோலியை ரிவியூ எடுக்கச் சொல்லி கெஞ்சிய பந்த்: பலன் கிடைத்ததா? (விடியோ)
ஜாஸ்பிரீத் பூம்ரா வீசிய அடுத்த ஓவரில் ஸ்டுவர்ட் பிராட் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, களத்திலிருந்த சாம் கரன் அதிரடிக்கு மாறத் தொடங்கினார். இதனால், இங்கிலாந்து ஸ்கோர் லேசாக உயர்ந்தது.
எனினும், பூம்ராவின் சிறப்பான யார்க்கர் பந்தால் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல்டானார்.
இதன்மூலம், அந்த அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியத் தரப்பில் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.