செய்திகள்

பெங்களூருக்கு 2-ஆவது வெற்றி

DIN

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த சீசனில் பெங்களூர் அணி தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. 
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியின் இன்னிங்ûஸ கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் தொடங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2-ஆவது பந்தில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார் கோலி. ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. புவனேஸ்வர் குமார் வீசிய 3-ஆவது ஓவரில்  நதீமிடம் கேட்ச் ஆனார் படிக்கல். அவர் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த ஷாபாஸ் அஹமது 10 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு கேப்டன் கோலியுடன் இணைந்தார் கிளன் மேக்ஸ்வெல். இந்த ஜோடி சற்று நிதானமாக ஆட, பெங்களூரின் ரன் வேகம் குறைந்தது. இதனால் முதல் 10 ஓவர்களில் 63 ரன்களே எடுத்திருந்தது பெங்களூர். 
நதீம் வீசிய 11-ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் மேக்ஸ்வெல் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாச, பெங்களூரின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. அந்த அணி 12.1 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்திருந்தபோது கோலியின் விக்கெட்டை இழந்தது. அவர் 29 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் ஆனார்.
பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 1, வாஷிங்டன் சுந்தர் 8, டேன் கிறிஸ்டியான் 1, கைல் ஜேமிசன் 12 ரன்களில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுபுறம் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 38 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது.
ஹைதராபாத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஹைதராபாத் தோல்வி: பின்னர் ஆடிய ஹைதராபாத் அணியில் ரித்திமான் சாஹா 1 ரன்னில் வெளியேற, கேப்டன் டேவிட் வார்னருடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. இந்த ஜோடி வேகமாக ரன் சேர்க்க, ஹைதராபாதின் ஸ்கோர் உயர்ந்தது. 31 பந்துகளில் அரை சதம் கண்ட வார்னர், 37 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்த ஜானி பேர்ஸ்டோ 12 ரன்களில் வெளியேற, மணீஷ் பாண்டே 39 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு அப்துல் ஸமாத் டக் அவுட்டாக, கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே விஜய் சங்கர் 3, ஜேசன் ஹோல்டர் 4 ரன்களில் வெளியேற, ஹைதராபாதின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓவரை வீசிய ஹர்ஷால் படேல் நோபாலை வீச, அதில் ரஷித்கான் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. எனினும் அடுத்த பந்தில் ரஷித்கான் (17 ரன்கள்) ரன் அவுட்டாக, 5-ஆவது பந்தில் நதீம் டக் அவுட்டானார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது ஹைதராபாத். 
பெங்களூர் தரப்பில் ஷாபாஸ் அஹமது 2 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.


சுருக்கமான ஸ்கோர்

பெங்களூர்    149/8 


கிளன் மேக்ஸ்வெல்    59 (41)
விராட் கோலி    33 (29)
ஜேசன் ஹோல்டர்    3வி/30

ஹைதராபாத்..143/9


டேவிட் வார்னர்    54 (37)
மணீஷ் பாண்டே    38 (39)
ஷாபாஸ் நதீம்    3வி/7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

SCROLL FOR NEXT