செய்திகள்

இளம் வீரர்கள் தயாராவதை ஆஸ்திரேலிய தொடர் உணர்த்தியது

1st Apr 2021 03:57 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஓய்வுபெற்றால், அணியில் சுணக்கம் ஏற்படாத வகையில் அந்த இடத்தை நிரப்ப இளம் வீரர்கள் தயாராவதை ஆஸ்திரேலிய தொடர் உணர்த்தியது என்று மூத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறினார். 

ஆஸ்திரேலிய தொடரின்போது இடுப்பில் காயமடைந்த முகமது ஷமி, அந்தத் தொடரிலிருந்து விலகினார். அதேபோல், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோராலும் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. 
அத்தகைய அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டில் அறிமுக வீரர் முகமது சிராஜ் அசத்த, வலைப்பயிற்சியில் பந்துவீசச் சென்ற ஷர்துல் தாக்குர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர், காயம் காரணமாக மூத்த வீரர்கள் விலகியதால் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி தங்களது திறமையை நிரூபித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். 
இந்நிலையில், அதுகுறித்து முகமது ஷமி கூறியதாவது: 
எங்களைப் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வுபெறும் காலகட்டம் வரும்போது அணிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில், எங்களது இடத்தை நிரப்ப இளம் வீரர்கள் தயாராகி வருவதை ஆஸ்திரேலிய தொடர் உணர்த்தியது. அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்போது அவர்கள் இன்னும் மேம்படுவார்கள். எனவே, அணி எங்கள் கைகளில் இருந்து இளம் வீரர்கள் கைகளுக்குச் செல்கையில் எந்தவொரு தடுமாற்றமும் இருக்காது. 
அனுபவமிக்க மூத்த வீரர்களில் எவர் ஒருவர் ஓய்வுபெற்றாலும், அது அணியை பாதிக்காது. ஏனெனில் அந்த இடத்துக்குப் பொருத்தமான இளம் வீரர்கள் தயார் நிலையில் இப்போதே இருக்கின்றனர். அனுபவம் முக்கியம் தான் என்றாலும், காலம் வரும்போது அது அவர்களுக்குக் கிடைக்கும். 
கரோனா சூழலில் வலைப்பயிற்சியில் பந்துவீசும் பெளலர்களையும் பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்திலேயே வைத்திருந்தது அவர்களுக்கு நல்லதொரு பலனையும், அனுபவத்தையும் அளித்துள்ளது. இளம் பெளலர்கள் திறந்த மனதுடன், நல்ல தன்னம்பிக்கையுடன் வருகின்றனர். புதிது, பழையது என எந்தப் பந்திலும் பெளலிங் செய்யத் தயாராக இருக்கின்றனர். 
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினோம். அதுவும் இரு தொடர்களில் மூத்த பெளலர்கள் இல்லாமலேயே. நமது இளம் வீரர்களை நம்பலாம் என்பதற்கு இதுவே உதாரணம். நான் புதிதாக வந்தபோது இஷாந்த் எனக்கு அதிகம் உதவினார். அது, எனக்குப் பின்னே வரும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் எண்ணத்தை எனக்கும் ஏற்படுத்தியது. அவர் மூத்த வீரர் போல என்னிடம் பழகியதில்லை என்று ஷமி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT