செய்திகள்

ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் கோலி

1st Apr 2021 03:54 AM

ADVERTISEMENT


துபை: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய கோலி, 870 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (837) இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா (825) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களுக்குள்ளாக வேறு இந்தியர்கள் இல்லை. 

ஹார்திக் பாண்டியா தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக 42-ஆவது இடத்துக்கு முன்னேற, ரிஷப் பந்த் 91-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தைப் பொருத்தவரை 2-ஆவது ஆட்டத்தில் 99 ரன்களில் ஆட்டமிழந்த பென் ஸ்டோக்ஸ் 4 இடங்கள் முன்னேறி 24-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். அதே ஆட்டத்தில் 124 ரன்கள் விளாசிய ஜானி பேர்ஸ்டோ 7-ஆவது இடத்தை தக்கவைத்துள்ளார். தரவரிசை புள்ளிகள் வரலாற்றில் முதல் முறையாக அவர் 796-ஐ எட்டியுள்ளார். 

பெளலர்கள் பிரிவில், ஜஸ்பிரீத் பும்ரா ஓரிடம் சறுக்கி 690 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி ஆட்டத்தில் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்த புவனேஷ்வர் குமார் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதே ஆட்டத்தில் 67 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்த ஷர்துல் தாக்குர் 13 இடங்கள் முன்னேறி 80-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். 

ADVERTISEMENT

இங்கிலாந்தின் மொயீன் அலி 9 இடங்கள் முன்னேறி 46-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இப்பிரிவில் நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் (737), ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (708), நியூஸிலாந்தின் மாட் ஹென்றி (691) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். 

ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 9-ஆவது இடத்தில் தொடர்கிறார். வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (408) முதலிடத்திலும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி (294) 3-ஆவது இடத்திலும் இருக்கின்றனர். 

டி20: டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் லோகேஷ் ராகுல், விராட் கோலி தலா ஓரிடம் சறுக்கி முறையே 5 மற்றும் 6-ஆவது இடங்களில் உள்ளனர். 

டெஸ்ட்: டெஸ்ட் தரவரிசையில் பெளலர்கள் பிரிவில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து 2-ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முறையே 3 மற்றும் 4-ஆவது இடத்தில் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் பிரிவில் கோலி 5-ஆம் இடத்திலும், ரிஷப் பந்த் மற்றும் ரோஹித் சர்மா 7-ஆவது இடத்தில் நீடிக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT