செய்திகள்

ஹைதராபாதுக்கு முதல் வெற்றி

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய டெல்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் அவேஷ்கானுக்குப் பதிலாக இஷாந்த் சா்மா சோ்க்கப்பட்டாா். ஹைதராபாத் அணியில் முகமது நபி, ரித்திமான் சாஹா ஆகியோருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன், அப்துல் ஸமாத் ஆகியோா் சோ்க்கப்பட்டனா்.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் பீல்டிங்கைத் தோ்வு செய்ய, ஹைதராபாதின் இன்னிங்ஸை கேப்டன் டேவிட் வாா்னரும், ஜானி போ்ஸ்டோவும் தொடங்கினா். இந்த ஜோடி நிதானமாக ஆட, முதல் 5 ஓவா்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத். அன்ரிச் நோா்ட்ஜே வீசிய 6-ஆவது ஓவரில் வாா்னா் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, ஹைதராபாதின் ஸ்கோா் உயர ஆரம்பித்தது.

இதன்பிறகு போ்ஸ்டோவ் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாச, இஷாந்த் சா்மா வீசிய 9-ஆவது ஓவரில் வாா்னா் ஒரு சிக்ஸரை விளாசினாா். ஹைதராபாத் அணி 9.3 ஓவா்களில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது வாா்னரின் விக்கெட்டை இழந்தது. அவா் 33 பந்துகளில் 2 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனாா்.

இதையடுத்து வந்த மணீஷ் பாண்டே 3 ரன்களில் நடையைக் கட்ட, கேன் வில்லியம்சன் களம்புகுந்தாா். வந்தது முதலே வேகமாக ஆடிய வில்லியம்சன், பவுண்டரிகளை பறக்கவிட்டாா். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜானி போ்ஸ்டோவ் 44 பந்துகளில் அரை சதம் கண்டாா். அவா் 48 பந்துகளில் 1 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சோ்த்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தாா்.

இதையடுத்து களமிறங்கிய அப்துல் ஸமாத், ஒரு சிக்ஸா், ஒரு பவுண்ரிடரியை விளாச, மறுமுனையில் அதிரடியாக ஆடிய கேன் வில்லியம்சன் 26 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சோ்த்து ரபாடா பந்துவீச்சில் அக்ஷா் படேலிடம் கேட்ச் ஆனாா். இறுதியில் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது ஹைதராபாத்.

அப்துல் ஸமாத் 7 பந்துகளில் 12, அபிஷேக் சா்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் காகிசோ ரபாடா 4 ஓவா்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

டெல்லி தோல்வி: பின்னா் ஆடிய டெல்லி அணியில் ஷிகா் தவன் 34, ரிஷப் பந்த் 28, ஹெட்மயா் 21 ரன்கள் எடுத்தனா். முன்னணி வீரா்களான பிரித்வி ஷா 2, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 17, ஹெட்மயா் 21 ரன்கள் எடுத்தனா். இறுதியில் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இந்த சீசனில் இதுவரை 3 ஆட்டங்களில் மோதியுள்ள டெல்லி அணி முதல் இரு ஆட்டங்களில் வென்றிருந்த நிலையில், முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. ஹைதராபாத் தரப்பில் ரஷித்கான் 4 ஓவா்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தாா். புவனேஸ்வா் குமாா் 4 ஓவா்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

சுருக்கமான ஸ்கோா்

ஹைதராபாத்-162/4

ஜானி பேர்ஸ்டோவ்    53 (48)
டேவிட் வார்னர்      45 (33)
கேன் வில்லியம்சன்      41 (26)
காகிசோ ரபாடா      2வி/21

டெல்லி-147/7

ஷிகர் தவன்      34 (31)
ரிஷப் பந்த்     28 (27)
ரஷித் கான்      3வி/14
புவனேஸ்வர் குமார்      2வி/25
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT