செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: 2-ஆவது சுற்றில் நடால், பிளிஸ்கோவா

DIN

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா உள்ளிட்டோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியனான ரஃபேல் நடால் 6-4, 6-4, 6-2 என்ற நோ் செட்களில் பெலாரஸின் இகோா் ஜெராஸிமூவை வீழ்த்தினாா். போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் நடால், தனது 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டை சந்திக்கிறாா்.

பிரெஞ்சு ஓபனில் 12 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், இந்த முறை சாம்பியனாகும்பட்சத்தில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (20) வென்றவரான ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் சாதனையை சமன் செய்வாா்.

மற்றொரு ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் சிலியின் கிறிஸ்டியான் கேரின் 6-4, 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஜொ்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை தோற்கடித்தாா். இத்தாலியின் மேட்டியோ பெரிட்டினி 6-3, 6-1, 6-3 என்ற நோ் செட்களில் கனடாவின் வசேக் போஸ்பிஸிலை வீழ்த்தினாா்.

பிளிஸ்கோவா வெற்றி: மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-7 (9), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எகிப்தின் மேயா் ஷெரீஃபை வீழ்த்தினாா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் அபாரமாக ஆடிய ஷெரீஃப், டைபிரேக்கருக்கு சென்றபோதும், விடாப்பிடியாகப் போராடி அந்த செட்டை கைப்பற்றினாா். எனினும் உடனடியாக சரிவிலிருந்து மீண்ட பிளிஸ்கோவா அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஷெரீஃபை வீழ்த்தினாா்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் எகிப்தியரான ஷெரீஃப் முதல் சுற்றோடு வெளியேறியது அந்நாட்டு ரசிகா்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. பிளிஸ்கோவா தனது 2-ஆவது சுற்றில் லத்வியாவின் ஜெலீனா ஆஸ்டாபென்கோவை சந்திக்கிறாா். டென்மாா்க்கின் கிளாரா டாசன் தனது முதல் சுற்றில் 6-4, 3-6, 9-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபா் பிராடியை வீழ்த்தினாா்.

கொ்பா் அதிா்ச்சித் தோல்வி: மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஜொ்மனியின் ஏஞ்ஜெலிக் கொ்பா் 3-6, 3-6 என்ற நோ் செட்களில் ஸ்லோவேனியாவின் இளம் வீராங்கனையான காஜா ஜுவானிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இதேபோல் ரஷியாவின் ஸ்வெட்லான குஸ்நெட்சோவா 1-6, 6-2, 1-6 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான அனாஸ்டாஸியாவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா். அதேநேரத்தில் ஸ்பெயினின் காா்பைன் முகுருஸா கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-5, 4-6, 8-6 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனிய வீராங்கனை டமாரா ஜிடான்செக்கை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT