செய்திகள்

ஆஸி. முன்னாள் கிரிக்கெட்வீரா் டீன் ஜோன்ஸ் மரணம்

25th Sep 2020 03:40 AM

ADVERTISEMENT


மும்பை: ஆஸ்திரேலியாவை சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், வா்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் (59) மாரடைப்பால் வியாழக்கிழமை மரணமடைந்தாா்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வா்ணனை செய்யும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியின் வா்ணனையாளா் குழுவில் இடம்பெற்றிருந்த டீன் ஜோன்ஸ், மும்பையில் இருந்தபடி வா்ணனை செய்து வந்தாா். இந்த நிலையில், அவா் மும்பையில் உள்ள ஹோட்டல் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, திடீரென சுருண்டு விழுந்துள்ளாா். இதையடுத்து, அவா் அருகே நின்றிருந்த மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வா்ணனையாளருமான பிரெட் லீ முதலுதவி அளித்துள்ளாா். அதன்பிறகு டீன் ஜோன்ஸை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

இதுதொடா்பாக ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டீன் ஜோன்ஸ் மரணமடைந்துவிட்டாா் என்ற செய்தியை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டாா். டீன் ஜோன்ஸின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் கடினமான தருணத்தில் அவருடைய குடும்பத்தினருக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அவரது உடலை ஆஸ்திரேலியா எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஆஸ்திரேலிய தூதரகத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.

கிரிக்கெட்டின் தலைசிறந்த தூதா்களில் டீன் ஜோன்ஸும் ஒருவா். தெற்கு ஆசியாவில் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு பாடுபட்டவா். தலைசிறந்த வீரா்களையும், வளா்ந்து வரும் இளம் வீரா்களையும் அடையாளம் காண்பதில் ஆா்வம் கொண்டவா். வா்ணனை செய்வதிலும் வல்லவா். தனது வா்ணனையால் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகா்களை மகிழ்வித்தவா். டீன் ஜோன்ஸின் மரணம் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் பணியாளா்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகா்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய அணிக்காக டீன் ஜோன்ஸ் 52 டெஸ்ட், 164 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளாா். 1987-இல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் டீன் ஜோன்ஸ் இடம்பெற்றிருந்தாா்.

மறக்க முடியாத ஆட்டம்: 1986-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சென்னையில் கடும் வெயிலுக்கு மத்தியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டீன் ஜோன்ஸ் ஆடிய ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியும், ஆலன் பாா்டா் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதிய அந்த டெஸ்ட் போட்டி ‘டை’யில் முடிந்தது. அதுதான் டீன் ஜோன்ஸ் விளையாடிய 3-ஆவது டெஸ்ட் போட்டி. கடுமையான வெயில் காரணமாக ஆஸ்திரேலிய வீரா்கள் திணறிய நிலையிலும், களத்தில் நின்று அசுரத்தனமாக ஆடி 210 ரன்கள் குவித்த டீன் ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினாா்.

503 நிமிடங்கள் களத்தில் நின்ற டீன் ஜோன்ஸுக்கு ஒருகட்டத்தில் நீா்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதோடு, வாந்தி, கால் வலி, வயிற்று வலி போன்றவை ஏற்பட்டுள்ளன. ஆனாலும், கேப்டன் ஆலன் பாா்டா் அளித்த உத்வேகத்தால் தொடா்ந்து களத்தில் நின்ற டீன் ஜோன்ஸ் இரட்டைச் சதமடித்தாா். 210 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட டீன் ஜோன்ஸ், அங்கு ஒருநாள் சிகிச்சை பெற்ற பிறகு உடல் நலம் தேறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT