செய்திகள்

இத்தாலி ஓபன்: அரையிறுதியில் சைமோனா, ஜோகோவிச்

DIN

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ருமேனியாவின் சைமோனா ஹேலப் உள்ளிட்டோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் ரோம் ஓபன் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில்  சைமோனா ஹேலப், கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை சைமோனா 6-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 2-ஆவது செட்டிலும் அவரே ஆதிக்கம் செலுத்தினார். முதல் இரு கேம்களின் முடிவில் சைமோனா 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, யூலியா அடிமுதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து காலிறுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சைமோனா, முதல் நபராக அரையிறுதிக்கு முன்னேறினார். இத்தாலி ஓபனில் சைமோனா 5-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் இருந்து தற்போது வரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள சைமோனா ஹேலப் அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். இதேபோல், கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு டென்னிஸ் போட்டியில் களம் கண்டது முதல் தற்போது வரை 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.
அரையிறுதியில் ஜோகோவிச்: ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டொமினிக் கீப்பரை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார். இத்தாலி ஓபனில் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறுவது 11-ஆவது முறையாகும். ஜோகோவிச் தனது அரையிறுதியில் நார்வேயின் காஸ்பர் ரூட்டை சந்திக்கிறார்.
மற்றொரு காலிறுதியில் நார்வேயின் காஸ்பர் ரூட் 4-6, 6-3, 7-6 (5) என்ற செட் கணக்கில் இத்தாலியின் மேட்டி பெரிட்டினியை வீழ்த்தினார்.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த காஸ்பர், அடுத்த செட்டில் அபாரமாக ஆடி 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டில் இருவரும் அபாரமாக ஆட, ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் விடாப்பிடியாக போராடிய காஸ்பர் அந்த செட்டை 7-6 (5) என்ற கணக்கில் கைப்பற்றி அரையிறுதியை உறுதி செய்தார்.  இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் நார்வே வீரர் என்ற பெருமையை காஸ்பர் பெற்றார்.
காலிறுதியில் நடால்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நடால் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் செர்பியாவின் துசன் லஜோவிச்சை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT