செய்திகள்

62 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

16th Sep 2020 01:00 PM

ADVERTISEMENT

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதால் 62 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகப் பல கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகியுள்ளன. பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இங்கிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வந்தாலும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதையடுத்து 20% ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயல் அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியதாவது:

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமையை ஆராய்ந்தோம். இதன்மூலம் எங்களுடைய லட்சியங்களில் சமரசம் செய்துகொள்ளாமல் செலவைக் குறைக்க முடிவெடுத்துள்ளோம். இதற்காகச் சில முடிவுகளை எடுத்துள்ளோம். இதன்மூலம் செலவைக் குறைத்து நன்குச் சேமிக்க முடியும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒவ்வொரு பிரிவும் மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்குறைப்பு நடந்தால் மட்டுமே செலவைக் குறைத்து சேமிக்க முடியும். 

ADVERTISEMENT

20% ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளோம். இதன்மூலம் 62 பேர் வேலை இழப்பார்கள். தற்போது பணியாற்றி வருபவர்களின் பதவிகளிலும் மாற்றம் செய்யவுள்ளோம். இதன்மூலமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க முடியும். இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவு தர முடிவெடுத்துள்ளோம். வருங்காலத்தில் கிரிக்கெட் நடவடிக்கைகளைப் பாதுகாக்க வழிவகுத்துள்ளோம். இதுதொடர்பான மேலதிக விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றார். 

Tags : England cricket Board
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT