செய்திகள்

நெருக்கடி தரும் பாதுகாப்பு வளையம்: பிபிஎல் போட்டியிலிருந்து விலக ஆர்ச்சர் முடிவு!

15th Sep 2020 02:12 PM

ADVERTISEMENT

 

கரோனா பாதுகாப்பு வளையம் தரும் நெருக்கடியால் இந்த வருட பிக் பேஷ் (பிபிஎல்) டி20 போட்டியிலிருந்து விலக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் முடிவெடுத்துள்ளார். 

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

மே.இ. தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வரும் ஆர்ச்சர் கடந்த 87 நாள்களாகப் பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ்ந்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு அணி வீரரும் பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் உள்ள வீரர்கள் வெளியே செல்லக்கூடாது, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் வெளி ஆள்களைச் சந்திக்கக் கூடாது. இதன்மூலம் கரோனாவிலிருந்து வீரர்களைக் காக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாட்டின்படி கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. 

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனாவால் பாதுகாப்பு வளையத்தில் வாழும் வாழ்க்கை முறை பற்றி ஆர்ச்சர் கூறியதாவது:

இது மிகவும் சவாலானது. 16 வாரங்களாக இதில் உள்ளோம் என நினைக்கிறேன். இனிமேல் வீட்டுக்குச் செல்வது அரிதாகவே இருக்கும். இந்த வாழ்க்கைமுறை தான் இனி தொடரும் போல. இதற்காக நாம் பழகிக்கொள்ள வேண்டும். இந்த வருடம் இனிமேலும் எத்தனை பாதுகாப்பு வளையத்துக்குள் நான் வாழ வேண்டும் எனத் தெரியவில்லை. 

கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு என் குடும்பத்தை நான் பார்க்கவில்லை. இப்போது செப்டம்பர் ஆகிவிட்டது. ஐபிஎல்-லுக்காக அக்டோபர் மாதம் வரை இருக்கவேண்டும். நவம்பரில் நாங்கள் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறோம். டிசம்பரில் மட்டும் சில வாரங்கள் எனக்கு ஓய்வு கிடைக்கும். பிபிஎல் போட்டியில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் என் குடும்பத்தினரிடம் நான் நேரத்தைச் செலவிட வேண்டும். அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக இந்தியாவிலோ ஐக்கிய அரபு அமீரகத்திலோ விளையாட வேண்டும். எனவே இந்த வருட பிபிஎல் டி20 போட்டியில் நான் விளையாடாமல் போகலாம் எனக் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT