செய்திகள்

யு.எஸ். ஓபன் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி

11th Sep 2020 10:55 AM

ADVERTISEMENT

 

இந்தமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யு.எஸ். ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார் செரீனா வில்லியம்ஸ். 

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

காலிறுதியில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ் அதன் மூலம் தொடர்ச்சியாக 11-வது தடவையாக யு.எஸ். போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 2007-ல் காலிறுதியில் தோற்ற செரீனா அதன்பிறகு பங்கேற்ற அனைத்து யு.எஸ். ஓபன் போட்டிகளிலும் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT

யு.எஸ். ஓபன் அரையிறுதிச் சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அசரன்காவை எதிர்கொண்டார் செரீனா. இதற்கு முன்பு இருவரும் யு.எஸ். ஓபன் போட்டியில் 2012, 2013 இறுதிச்சுற்றுகளில் மோதி இரண்டிலும் செரீனா வெற்றி பெற்று கோப்பைகளை வென்றார். செரீனா இதுவரை ஆறு முறை யு.எஸ். ஓபன் கோப்பையை வென்றுள்ளார். கடந்த இரு வருடங்களாக இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளார். இதனால் இந்த வருட அரையிறுதிச் சுற்றில் செரீனா வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவை அசரன்கா வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இறுதிச்சுற்றில் அவர் ஒசாகாவுடன் மோதுகிறார்.

இந்தமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வென்றிருந்தால் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்கரட் கோர்ட்டின் சாதனையைச் சமன் செய்ததாக இருந்திருக்கும். இதனால் செரீனாவின் தோல்வி டென்னிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Tags : Azarenka Serena Williams
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT