செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20: நட்சத்திர வீரர் பட்லர் விலகல்

8th Sep 2020 10:22 AM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் இருந்து நட்சத்திர வீரர் பட்லர் விலகியுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனிலும் ஒருநாள் தொடர் மான்செஸ்டரிலும் நடைபெறவுள்ளன. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. ஞாயிறு அன்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஃபிஞ்ச் 40 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு டி20 தொடரையும் வென்றது. விக்கெட் கீப்பரும் தொடக்க வீரருமான பட்லர், 54 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ADVERTISEMENT

3-வது டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆட்டத்தில் இருந்து நட்சத்திர வீரர் பட்லர் விலகியுள்ளார். எனினும் வெள்ளி முதல் தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவுள்ளார். 

இரு டி20 ஆட்டங்களில் வென்றதன் மூலம் டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு இணையாக 273 புள்ளிகளைப் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இதனால் இரு அணிகளும் தற்போது முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

3-வது டி20 ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தரவரிசையில் முதல் இடத்தைக் கைப்பற்றும் என ஐசிசி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT