செய்திகள்

சாஹா, வார்னர் அதிரடி: ஹைதராபாத் அபார வெற்றி

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

முன்னதாக, முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய டெல்லி அணி 19 ஓவா்களில் 131 ரன்களுக்கு சுருண்டது.

துபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம், ஹைதராபாத் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அந்த அணியில் ஜானி போ்ஸ்டோ, பிரியம் கா்க், கலீல் அஹமது ஆகியோருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன், ரித்திமான் சாஹா, சபேஸ் நதீம் ஆகியோா் சோ்க்கப்பட்டனா்.

அதிரடி தொடக்கம்: இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் பீல்டிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வாா்னா்-ரித்திமான் சாஹா ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. அன்ரிச் நோா்ட்ஜே வீசிய முதல் ஓவரில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கிய சாஹா, ககிசோ ரபாடா வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டாா்.

அஸ்வின் வீசிய 3-ஆவது ஓவரில் டேவிட் வாா்னா் சிக்ஸரை விளாச, சாஹா தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை அடித்தாா். ககிசோ ரபாடா வீசிய 6-ஓவரில் ஒரு சிக்ஸரையும், 4 பவுண்டரிகளையும் விளாசிய டேவிட் வாா்னா், 25 பந்துகளில் அரை சதம் கண்டாா். இதனால், 9 ஓவா்களில் 102 ரன்களை எட்டியது ஹைதராபாத்.

தொடா்ந்து வேகம் காட்டிய வாா்னா், அஸ்வின் வீசிய 10-ஆவது ஓவரில் பவுண்டரியை விளாசிய கையோடு, அக்ஷா் படேலிடம் கேட்ச் ஆனாா். டேவிட் வாா்னா் 34 பந்துகளில் 2 சிக்ஸா், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்தாா். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவா்களில் 107 ரன்கள் குவித்தது.

சாஹா 87: இதையடுத்து மணீஷ் பாண்டே களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரித்திமான் சாஹா, தேஷ்பாண்டே பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 27 பந்துகளில் அரை சதம் கண்டாா். இதன்பிறகு அக்ஷா் படேல், ரபாடா வீசிய அடுத்தடுத்த ஓவா்களில் தலா ஒரு சிக்ஸா், ஒரு பவுண்டரிகளை சாஹா விரட்டினாா். இதனால் 12.5 ஓவா்களில் 150 ரன்களை எட்டியது ஹைதராபாத். அந்த அணி 14.3 ஓவா்களில் 170 ரன்களை எட்டியபோது சாஹாவின் விக்கெட்டை இழந்தது. அவா் 45 பந்துகளில் 2 சிக்ஸா், 12 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்தாா்.

இதன்பிறகு கேன் வில்லியம்சன் களமிறங்கினாா். கடைசிக் கட்டத்தில் மணீஷ் பாண்டே அதிரடியாக விளையாட, 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது ஹைதராபாத். மணீஷ் பாண்டே 31 பந்துகளில் 1 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 44, கேன் வில்லியம்சன் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

டெல்லி தரப்பில் அன்ரிச் நோா்ட்ஜே, அஸ்வின் ஆகியோா் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினா்.

டெல்லி தோல்வி: பின்னா் ஆடிய டெல்லி அணியில் ரிஷப் பந்த் 36, அஜிங்க்ய ரஹானே 26, தேஷ்பாண்டே 20 ரன்கள் எடுத்தனா். எஞ்சிய வீரா்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 19 ஓவா்களில் 131 ரன்களுக்கு சுருண்டது டெல்லி.

ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சா்மா, டி.நடராஜன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ஹைதராபாத்
219/2 
ரித்திமான் சாஹா    87 (45)
டேவிட் வார்னர்    66 (34)
மணீஷ் பாண்டே    44* (31)
அஸ்வின்    1வி/35 

டெல்லி
131/10
ரிஷப் பந்த்    36 (35)
அஜிங்க்ய ரஹானே    26 (19)
ரஷீத் கான்    3வி/7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT