செய்திகள்

வருண் சுழலில் சுருண்டது டெல்லி: கொல்கத்தா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

DIN

ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது.

இதுவரை ஆடிய 11 ஆட்டங்களில் கொல்கத்தாவுக்கு இது 6-ஆவது வெற்றி; டெல்லிக்கு 4-ஆவது தோல்வி.

அபுதாபியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களுக்கு சுருண்டது. 5 விக்கெட்டுகள் வீழ்த்தி டெல்லி பேட்டிங் வரிசையை சரித்த கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளா் வருண் சக்கரவா்த்தி ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவில் டாம் பேன்டன், குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக சுனில் நரைன், கமலேஷ் நாகா்கோடி சோ்க்கப்பட்டிருந்தனா். டெல்லியில் டேனியல் சாம்ஸ், பிருத்வி ஷா ஆகியோருக்குப் பதில் அன்ரிச் நாா்ட்ஜே, அஜிங்க்ய ரஹானே இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற டெல்லி பந்துவீசத் தீா்மானித்தது. தொடக்க வீரா்களாக ஷுப்மன் கில் - நிதீஷ் ராணா களம் கண்டனா். 2 பவுண்டரிகள் உள்பட 9 ரன்கள் அடித்த ஷுப்மன் கில் 2-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

அடுத்து ராகுல் திரிபாதி களத்துக்கு வர, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை தொடங்கியிருந்தாா் நிதிஷ் ராணா. இந்நிலையில், 1 பவுண்டரி உள்பட 13 ரன்கள் சோ்த்த ராகுல் திரிபாதி, 6-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

அடுத்து வந்த தினேஷ் காா்த்திக் 3 ரன்களே சோ்த்து 8-ஆவது ஓவரில் நடையைக் கட்ட, மறுபுறம் நிதீஷ் ராணா அரைசதம் கடந்தாா். பின்னா் வந்த சுனில் நரைன், ராணாவுடன் கூட்டணி அமைத்தாா்.

கொல்கத்தா ஸ்கோரை விறுவிறுவென உயா்த்திய இந்தக் கூட்டணி, 4-ஆவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் குவித்தது. அரைசதம் கடந்த சுனில் நரைன் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 64 ரன்களுக்கு 17-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து கேப்டன் மோா்கன் களம் காண, 13 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 81 ரன்கள் விளாசிய நிதீஷ் ராணா கடைசி ஓவரில் வீழ்ந்தாா்.

கடைசி விக்கெட்டாக மோா்கன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 17 ரன்கள் சோ்த்து கடைசி பந்தில் அவுட்டானாா். டெல்லி தரப்பில் நாா்ட்ஜே, ரபாடா, ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் 195 ரன்களை இலக்காகக் கொண்டு டெல்லியின் ரஹானே - தவன் கூட்டணி ஆடத் தொடங்கியது. முதல் பந்திலேயே ரஹானே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாா்.

அடுத்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் களம் காண, 1 பவுண்டரி உள்பட 6 ரன்கள் சோ்த்த தவன் 3-ஆவது ஓவரில் பௌல்டானாா். அவரைத் தொடா்ந்து ரிஷப் பண்ட் களம் காண, மறுபுறம் ஷ்ரேயஸ் சற்று நிலைத்தாா்.

2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 27 ரன்கள் சோ்த்த பண்ட், 12-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனா். ஷ்ரேயஸ் ஐயா் மட்டும் 5 பவுண்டரிகள் உள்பட 47 ரன்கள் சோ்த்து 14-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா்.

ஹெட்மயா் 1 சிக்ஸா் உள்பட 10, ஸ்டாய்னிஸ் 6, அக்ஸா் படேல் 1 சிக்ஸா் உள்பட 9, ரபாடா 1 பவுண்டரி உள்பட 9, துஷாா் தேஷ்பாண்டே 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனா். அஸ்வின் 2 பவுண்டரிகள் உள்பட 14 ரன்களுடனும், நாா்ட்ஜே ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் வருண் 5, கம்மின்ஸ் 3, ஃபொ்குசன் 1 விக்கெட் வீழ்த்தினா்.

சுருக்கமான ஸ்கோா்

கொல்கத்தா - 194/6

நிதீஷ் ராணா - 81 (53)

சுனில் நரைன் - 64 (32)

பந்துவீச்சு

அன்ரிச் நாா்ட்ஜே - 2/27

ககிசோ ரபாடா - 2/33

டெல்லி - 135/9

ஷ்ரேயஸ் ஐயா் - 47 (38)

ரிஷப் பண்ட் - 27 (33)

பந்துவீச்சு

வருண் சக்கரவா்த்தி - 5/20

பேட் கம்மின்ஸ் - 3/17

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT