செய்திகள்

பெற்றோரிடமோ பயிற்சியாளரிடமோ எந்தப் பிரச்னையும் இல்லை: வதந்திகளுக்கு பி.வி. சிந்து மறுப்பு

20th Oct 2020 03:31 PM

ADVERTISEMENT

 

தனக்கு பெற்றோரிடமோ பயிற்சியாளரிடமோ எவ்விதப் பிரச்னையும் இல்லை என பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூறியுள்ளார்.

2016 ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி வென்று சாதனை படைத்தவர் பி.வி.சிந்து. கடந்த ஆகஸ்ட் மாதம் பேஸல் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக ஆடி முதன்முறையாக தங்கம் வென்றார். 

இந்நிலையில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பி.வி. சிந்து லண்டன் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் சிந்து கூறியதாவது:

ADVERTISEMENT

ஊட்டச்சத்து மற்றும் உடற்தகுதி தொடர்பான பயிற்சிகள், ஆலோசனைகளுக்காகச் சில நாள்களுக்கு முன்பு லண்டனுக்கு வந்தேன். என் பெற்றோரின் சம்மதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்கள் குடும்பத்தில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. 

எனக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த என் பெற்றோருடன் எனக்கு ஏன் பிரச்னை வரப்போகிறது? நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய குடும்பம். எனக்கு எப்போதும் அவர்கள் ஆதரவளிப்பார்கள். என் குடும்பத்தினருடன் தினமும் தொடர்பில் இருக்கிறேன். அதேபோல எனக்கு என்னுடைய பயிற்சியாளர் கோபிசந்த்துடனும் மற்றும் ஹைதராபாத் பாட்மிண்டன் அகாதமியில் உள்ள வசதிகளுடனும் எவ்வித பிரச்னையும் இல்லை என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT