செய்திகள்

உலகிலேயே முதன்முறையாக கோவிட்-19 மாற்று வீரராகக் களமிறங்கிய கிரிக்கெட் வீரர்!

20th Oct 2020 11:04 AM

ADVERTISEMENT

 

ஆக்லாந்து: உலகிலேயே முதன்முறையாக கோவிட்-19 மாற்று வீரராக நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் இந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் துவங்கியதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தன.  அதன்படி கிரிக்கெட் விளையாட்டிலும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தன.

அதன்படி சாதாரண காலங்களில் புழக்கத்தில் இருந்த மாற்று வீரர் என்னும் நடைமுறை போல, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ‘கோவிட்-19 மாற்று வீரர்’ என்னும் வசதி கொண்டு வரப்பட்டது. இந்த முடிவானது ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேசமயம் இது உள்ளூர் போட்டிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

ADVERTISEMENT

இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக கோவிட்-19 மாற்று வீரராக நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.

நியுசிலாந்து நாட்டின் மாகாணங்களுக்கு இடையே ப்ளங்கட் ஷீல்ட் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆக்லாந்து மற்றும் ஒட்டாகோ மாகாணங்களுக்கு இடையேயான போட்டி செவ்வாய் அன்று துவங்கியது. இதில் ஆக்லாந்து அணியில் விளையாட வேண்டிய பேட்ஸ்மேனான மார்க் சாப்மன் திங்களன்று உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததை அடுத்து அவருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதன் முடிவு வெளிவவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக கோவிட்-19 மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் களமிறங்கினார். இதன்மூலம் உலகின் முதல் கோவிட்-19 மாற்று வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இந்தத் தகவல் ஆக்லாந்து அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய ஒட்டாகோ மாகாணம் 186 ரன்களுக்குச் சுருண்டது. பென் லிஸ்டர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT