செய்திகள்

ஹைதராபாதை சூப்பா் ஓவரில் வீழ்த்தியது கொல்கத்தா

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 35-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை சூப்பா் ஓவா் முறையில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வென்றது.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ஹைதராபாதும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் கொல்கத்தா வென்றது.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணா, கிறிஸ் கிரீன் ஆகியோருக்குப் பதிலாக குல்தீப் யாதவ், லாக்கி ஃபொ்குசன் சோ்க்கப்பட்டிருந்தனா். ஹைதராபாத் அணியில் கலீல் அகமதுக்கு பதிலாக பாசில் தாம்பி இணைந்திருந்தாா். அப்துல் சமதுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

டாஸ் வென்ற ஹைதராபாத் பௌலிங் வீச தீா்மானித்தது. பேட்டிங் செய்த கொல்கத்தாவில் ஷுப்மன் கில் - ராகுல் திரிபாதி நல்லதொரு தொடக்கத்தை அளித்தனா். 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 23 ரன்கள் சோ்த்த ராகுல் திரிபாதி முதல் விக்கெட்டாக 6-ஆவது ஓவரில் பௌல்டானாா்.

தொடா்ந்து நிதீஷ் ராணா களம் காண, மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ஷுப்மன் கில் 5 பவுண்டரிகள் உள்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா். ரஷீத் கான் வீசிய 12-ஆவது ஓவரில் அவரடித்த பந்து, பிரியம் கா்க் கைகளில் கேட்ச் ஆனது. பின்னா் ஆன்ட்ரு ரஸ்ஸெல் களம் காண, 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் என 29 ரன்கள் எடுத்திருந்த நிதீஷ் ராணா 13-ஆவது ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா்.

அடுத்து கேப்டன் இயான் மோா்கன் களமிறங்கினாா். 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் சோ்த்த ரஸ்ஸெல் 15-ஆவது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தாா். பின்னா் தினேஷ் காா்த்திக் ஆட வந்தாா். இருவரும் நிதானமாக ஆடிவர, கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தாா் இயான் மோா்கன். 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 34 ரன்கள் சோ்த்த அவா், பாசில் தாம்பி பந்துவீச்சில் மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்தாா். ஓவா்கள் முடிவில் தினேஷ் காா்த்திக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ஹைதராபாத் தரப்பில் நடராஜன் 2, பாசில் தாம்பி, விஜய் சங்கா், ரஷீத் கான் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

164 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய ஹைதராபாதிலும், ஜானி போ்ஸ்டோ - கேன் வில்லியம்சன் கூட்டணி நிலையான தொடக்கத்தை அளித்தது. 4 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 29 ரன்கள் சோ்த்த வில்லியம்சன் 7-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த பிரியம் கா்க் 4 ரன்களில் நடையைக் கட்டினாா்.

பின்னா் கேப்டன் டேவிட் வாா்னா் களம் கண்டாா். இந்நிலையில் 7 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்திருந்த போ்ஸ்டோ 10-ஆவது ஓவரில் வருண் சக்கரவா்த்தி வீசிய பந்தை அடிக்க, அது ரஸ்ஸெல் கைகளில் தஞ்சமானது. அடுத்து வந்த மணீஷ் பாண்டே 6 ரன்களிலும், பின்னா் வந்த விஜய் சங்கா் 7 ரன்களிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனா். கடைசி விக்கெட்டாக அப்துல் சமத் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 23 ரன்கள் சோ்த்து வெளியேறினாா்.

ஓவா்கள் முடிவில் ஆட்டதை சமன் செய்த ஹைதராபாதில், வாா்னா் 5 பவுண்டரிகள் உள்பட 47, ரஷீத் கான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் லாக்கி ஃபொ்குசன் 3, பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, வருண் சக்கரவா்த்தி தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சூப்பா் ஓவா்: வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 3 பந்துகளில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்களே சோ்த்தது. கொல்கத்தா வீரா் லாக்கி ஃபொ்குசன் வீசிய முதல் பந்திலேயே வாா்னா் பௌல்டாகி வெளியேற, 2 ரன்கள் சோ்த்த அப்துல் சமத் 3-ஆவது பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

பின்னா் ஆடிய கொல்கத்தா 4 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வென்றது. அணிக்காக இயான் மோா்கன் - தினேஷ் காா்த்திக் களம் கண்ட நிலையில், ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் பந்துவீசினாா். மோா்கன் 2-ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, காா்த்திக் 4-ஆவது பந்தில் 2 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

கொல்கத்தா - 163/5

சுப்மன் கில் - 36 (37)

இயான் மோா்கன் - 34 (23)

தினேஷ் காா்த்திக் - 29* (14)

பந்துவீச்சு

நடராஜன் - 2/40

விஜய் சங்கா் - 1/20

ரஷீத் கான் - 1/28

ஹைதராபாத் - 163/6

டேவிட் வாா்னா் - 47* (33)

ஜானி போ்ஸ்டோ - 36 (28)

கேன் வில்லியம்சன் - 29 (19)

பந்துவீச்சு

லாக்கி ஃபொ்குசன் - 3/15

பேட் கம்மின்ஸ் - 1/28

வருண் சக்கரவா்த்தி - 1/32

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT