செய்திகள்

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை

14th Oct 2020 03:02 AM

ADVERTISEMENT

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னைக்கு இது 3-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு 5-ஆவது தோல்வி. 
துபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த 29-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே அடித்தது. சென்னை வீரர் ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார். 
இந்த ஆட்டதில் இரு அணிகளிலுமே மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சென்னையில் என்.ஜெகதீசனுக்குப் பதிலாக பியூஷ் சாவ்லாவும், ஹைதராபாதில் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக ஷாபாஸ் நதீமும் இணைந்திருந்தனர். 
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பேட் செய்யத் தீர்மானித்தார். வழக்கமாக கடைசி ஆர்டரில் வந்து விளாசும் சாம் கரன், இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கினார். உடன் டூ பிளெஸ்ஸிஸ் ஆட வந்தார். 
அதிரடிக்கு பெயர் பெற்ற டூ பிளெஸ்ஸிஸ் 3-ஆவது ஓவரில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார். 
அடுத்து வந்த ஷேன் வாட்சன் நிதானமாக ஆட, மறுமுனையில் சாம் கரன் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் விளாசினார். சந்தீப் சர்மா வீசிய 5-ஆவது ஓவரில் பந்தை அவர் அடிக்க முயல, அது ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. பின்னர் ராயுடு களமிறங்கினார். வாட்சனுடன் அவர் கைகோக்க, இருவர் கூட்டணி நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 
3-ஆவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். இறுதியாக கலீல் அகமதுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. 
3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் சேர்த்த ராயுடு 16-ஆவது ஓவரில் விளாச முயன்ற பந்து டேவிட் வார்னர் கைகளில் தஞ்சமானது. பின்னர் வந்த தோனியும் சற்று அதிரடி காட்டினார். 
ராயுடு பார்ட்னர்ஷிப்பை இழந்த வாட்சன், அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 42 ரன்கள் அடித்திருந்த அவர், நடராஜன் ஓவரில் மணீஷ் பாண்டே கைகளில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 
அடுத்த பேட்ஸ்மேனாக ஜடேஜா களம் புகுந்தார். தோனியுடன் சேர்ந்து அவரும் சிறிது விளாச அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 21 ரன்கள் அடித்திருந்த தோனி, 19-ஆவது ஓவரில் நடராஜன் பந்துவீச்சில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
அடுத்து வந்த டுவைன் பிராவோ டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 20 ஓவர்களின் முடிவில் ஜடேஜா 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 25, தீபக் சாஹர் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
ஹைதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா, நடராஜன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். 
பின்னர் 168 ரன்களை இலக்காகக் கொண்டு பேட் செய்த ஹைதராபாதில் முதல் விக்கெட்டாக கேப்டன் டேவிட் வார்னர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாம் கரன் வீசிய 4-ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் வார்னர். அடுத்து வந்த மணீஷ் பாண்டேவும் ஒரு பவுண்டரியுடன் அதே ஓவரில் நடையைக் கட்டினார். 
பின்னர் வில்லியம்சன் களம் காண, வார்னருடன் வந்த பேர்ஸ்டோ 2 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் சேர்த்து, ஜடேஜா வீசிய 10-ஆவது ஓவரில் பெüல்டாகினார். அடுத்து வந்தவர்களில் பிரியம் கர்க் 16, விஜய் சங்கர் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 
அரை சதம் கடந்த கேன் வில்லியம்சன் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினார். கரன் சர்மா வீசிய 18-ஆவது ஓவரில் ஷர்துல் தாக்குரிடன் கேட்ச் கொடுத்தார் அவர். 
இதையடுத்து தோல்வியை நோக்கி நகரத் தொடங்கிய ஹைதராபாதில் ரஷீத் கான் 14, ஷாபாஸ் நதீம் 5 ரன்களுக்கு வெளியேற, ஓவர்கள் முடிவில் சந்தீப் சர்மா 1 ரன்னுடனும், நடராஜன் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தனர். 
சென்னை தரப்பில் கரன் சர்மா, டுவைன் பிராவோ தலா 2, ஷர்துல் தாக்குர், ஜடேஜா, சாம் கரன் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

சுருக்கமான ஸ்கோர்
சென்னை

167/6
ஷேன் வாட்சன்    42 (38) 
அம்பட்டி ராயுடு    41 (34) 
சாம் கரன்    31 (21) 
பந்துவீச்சு 
சந்தீப் சர்மா      2/19 
நடராஜன்     2/41 
கலீல் அகமது     2/45
ஹைதராபாத்
147/8
வில்லியம்சன்    57 (39) 
ஜானி பேர்ஸ்டோ     24 (23) 
ரியான் பராக்     16 (18)
பந்துவீச்சு 
டுவைன் பிராவோ     2/25 
கரன் சர்மா     2/37 
ஷர்துல் தாக்குர்    1/10

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT