செய்திகள்

திருமணம் செய்வதாகக் கூறி கர்ப்பமாக்கினார்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் மீது பாலியல் புகார்

30th Nov 2020 03:58 PM

ADVERTISEMENT

 

திருமணம் செய்வதாகக் கூறி, கர்ப்பமாக்கிவிட்டு, தன்னை ஏமாற்றியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் மீது பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ள 26 வயது பாபர் அஸாம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாபர் அஸாம் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

கிரிக்கெட் வீரராக பாபர் அஸாம் இல்லாத காலத்திலிருந்தே எங்கள் இருவருக்கும் உறவு உள்ளது. பள்ளியில் என்னுடன் ஒன்றாகப் படித்தார். ஒரே பகுதியில் நாங்கள் வசித்தோம். 2010-ல் என்னிடம் காதலைச் சொன்னார். நான் அதை ஏற்றுக்கொண்டேன். பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். எங்கள் குடும்பத்தில் காதலைத் தெரிவித்தோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

2011-ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். நீதிமன்றத்தின் வழியாக என்னைத் திருமணம் செய்துகொள்வதாக அவர் தொடர்ந்து கூறி வந்தார். பல வாடகை வீடுகளில் இருவரும் வசித்தோம். எனினும் அவர் திருமணத்தைத் தவிர்த்து வந்தார். பாகிஸ்தான் அணிக்காகத் தேர்வாகாத போதும் அதற்குப் பிறகும் அவருடைய செலவுகளுக்கு நான் பணம் கொடுத்துள்ளேன். 

2014-ல் பாகிஸ்தான் அணிக்குத் தேர்வான பிறகு பாபர் அஸாமின் நடவடிக்கை மாறிப் போனது. அடுத்த வருடம் என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னேன். ஆனால் மறுத்துவிட்டார். 2016-ல் நான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினேன். அதிலிருந்து என்னிடம் வித்தியாசமான முறையில் நடந்துகொள்ள ஆரம்பித்து, துன்புறுத்தினார், அடித்தார். எனினும் என்னால் என் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிதால் அவர்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டேன். பிறகு அவருடைய நண்பர்களின் உதவியுடன் கருக்கலைப்பும் செய்துவிட்டார். 

2017-ல் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து வழக்குப்பதிவு செய்தேன். 10 வருடங்களாக என்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, துன்புறுத்தியுள்ளார். என்னைக் கொல்வதாகவும் பாபர் அஸாம் மிரட்டியுள்ளார் எனப் பேட்டியளித்துள்ளார். 

நியூசிலாந்துக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் அணியினருடன் பாபர் அஸாம் தற்போது உள்ளார். தன் மீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்து அவர் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT