செய்திகள்

இந்திய அணியை விராட் கோலி வழிநடத்தும் விதம் எனக்குப் புரியவில்லை: கெளதம் கம்பீர் சாடல்

30th Nov 2020 01:05 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது பும்ராவுக்கு ஆரம்பத்தில் அதிக ஓவர்கள் கொடுக்காதது ஏன் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. இந்த ஆட்டத்திலும் சதம் கடந்து ஆஸ்திரேலியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் ஆனாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் பற்றி முன்னாள் வீரர் கெளதம் கம்பீர், கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

உண்மையில் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்தும் விதம் எனக்குப் புரியவில்லை. ஆஸி. அணியிடம் உள்ள வலுவான பேட்டிங்கைக் கட்டுப்படுத்த, ஆட்டத்தின் ஆரம்பக்கட்டத்தில் விக்கெட்டுகள் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்று பேசிவருகிறோம். ஆனால் உங்களுடைய முக்கியமான பந்துவீச்சாளரை (பும்ரா) ஆரம்பத்தில் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீச அனுமதி தந்துள்ளீர்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் நான்கு ஓவரை வீசச் சொல்லிவிட்டு பிறகு அவருடைய பந்துவீச்சை 4-3-3 என்றுதான் பிரிப்பார்கள். 

ஆனால் உங்களுடைய முக்கியமான பந்துவீச்சாளர் ஆரம்பத்தில் இரு ஓவர்கள் மட்டுமே வீசினால், என்னால் இதுபோன்ற தலைமைப்பண்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் இதை விளக்கவும் முடியாது. இது டி20 கிரிக்கெட் அல்ல. இது ஒரு மோசமான தலைமைப்பண்பாகும். 

வாஷிங்டன் சுந்தர், ஷிவம் டுபே போன்ற அணியில் உள்ள மற்ற வீரர்களுக்குக் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வாய்ப்பளித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் எப்படிப் பந்துவீசுகிறார்கள் என்று பார்க்கலாம். ஆனால் ஆறாவது பந்துவீச்சாளருக்கான வீரர் அணியில் இல்லை என்றால் அது அணித்தேர்வின் பிரச்னையாகும். 

ஒருவருக்கு வாய்ப்பளித்து திறமையைக் கண்டறியாவிட்டால் சர்வதேச கிரிக்கெட்டில் அந்த வீரர் எப்படிச் செயல்படுவார் என்பது தெரியாமலேயே போய்விடும். அப்படிப்பட்ட வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லவில்லை. வருங்காலத்தில் இந்திய அணியை இது பாதிக்கும் என்றார். 

Tags : Gambhir Kohli's captaincy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT