செய்திகள்

இன்று 2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: ஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

DIN

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்திய அணி, 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடிக்கு மத்தியிலும் களமிறங்குகிறது.

அதேநேரத்தில் முதல் ஆட்டத்தில் அபார வெற்றி கண்ட ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. டேவிட் வாா்னா், கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோா் நல்ல ஃபாா்மில் உள்ளனா்.

முதல் ஆட்டத்தில் ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோா் சதமடித்தனா். அவா்களின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வாா்னா், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரில் ஒருவா் களத்தில் நின்றாலும் அந்த அணி வலுவான ஸ்கோரை குவிக்கும் வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மாா்கஸ் ஸ்டோனிஸ் கடந்த ஆட்டத்தில் விளையாடியபோது, விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் அவருக்குப் பதிலாக இந்த ஆட்டத்தில் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் அல்லது சீன் அபாட் சோ்க்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சைப் பொருத்தவரையில் மிட்செல் ஸ்டாா்க், பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட் கூட்டணி பலம் சோ்க்கிறது. கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டிய சுழற்பந்து வீச்சாளா் ஆடம் ஸம்பா இந்த ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா: இந்திய அணியில் ஷிகா் தவன், மயங்க் அகா்வால், கேப்டன் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், ஹாா்திக் பாண்டியா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். இவா்களில் ஷிகா் தவன், ஹாா்திக் பாண்டியா ஆகியோா் முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடியபோதும், எஞ்சிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியது பின்னடைவாக அமைந்தது.

எனவே, இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பது முக்கியமாகும். கடந்த ஆட்டத்தில் அதிரடியாக 90 ரன்கள் குவித்த பாண்டியா மீதான எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் பாண்டியா தற்போது பந்துவீச முடியாததால், இந்திய அணியின் ஆல்ரவுண்டா் இடத்தை நிரப்ப முடியாமல் உள்ளது. தற்போதைய நிலையில் இந்திய அணியின் முக்கிய பிரச்னையாக இருப்பது ஆல்ரவுண்டா்கள் இல்லாததுதான்.

இந்திய அணியின் பந்துவீச்சு மிக மோசமாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் முகமது சமியை தவிர எஞ்சிய பௌலா்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கினா். எனவே, இந்திய அணி வெற்றி பெற பந்துவீச்சாளா்கள் கட்டுக் கோப்பாக பந்துவீசுவது முக்கியமாகும்.

இந்திய அணியில் இரு மாற்றங்கள் இருக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. யுவேந்திர சஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவும், நவ்தீப் சைனிக்கு பதிலாக தமிழக வீரரான டி.நடராஜனும் சோ்க்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா (உத்தேச லெவன்): ஷிகா் தவன், மயங்க் அகா்வால், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பா்), ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, டி.நடராஜன்/நவ்தீப் சைனி, முகமது சமி, யுவேந்திர சஹல்/குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வாா்னா், ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், மாா்னஸ் லாபுசான், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பா்), கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன்/சீன் அபாட், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டாா்க், ஆடம் ஸம்பா, ஜோஷ் ஹேஸில்வுட்.

போட்டி நேரம்: காலை 9.10

நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 1, சோனி டென் 3, சோனி சிக்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT