செய்திகள்

அதானிக்குக் கடன் தர வேண்டாம்: சிட்னி மைதானத்துக்குள் நுழைந்து எதிர்ப்பைத் தெரிவித்த போராட்டக்காரர்கள்

27th Nov 2020 11:32 AM

ADVERTISEMENT

 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டத்தின்போது, இரு போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்து அதானி நிறுவனத்துக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஏழாவது ஓவரின்போது இரு போராட்டக்காரர்கள் சிட்னி மைதானத்துக்குள் நுழைந்தார்கள். அவர்கள் கையில் இந்தியத் தொழிலதிபர் அதானிக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகள் இருந்தன. இதன்பிறகு பாதுகாவலர்கள் மைதானத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை வெளியே கொண்டு சென்றார்கள். இச்சம்பவத்தால் கிரிக்கெட் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் வெட்டி எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தொழிலதிபர் அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நிலக்கரிச் சுரங்கம் கட்டுமானத்தை மேற்கொள்ள அதானி குழுமத்துக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இந்த அனுமதிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நிலக்கரி சுரங்கத்தால் வடக்கு ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் எனப் புகார் தெரிவித்துள்ளார்கள். பொது இடங்களில் பதாகைகளுடன் நின்று அதானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். சிட்னி நகரில் ஏற்கெனவே அதானிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதன் மற்றொரு முயற்சியாக, இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் ஆட்டம் நடைபெறும் சிட்னி மைதானத்துக்குள் இரு போராட்டக்காரர்கள் நுழைந்து கவனத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

பாரத ஸ்டேட் வங்கி, அதானிக்கு 1 பில்லியன் டாலரைக் கடனாக வழங்குவதற்கு ஸ்டாப் அதானி என்கிற ஆஸ்திரேலியப் போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிட்னி மைதானத்துக்குள் நுழைந்த இரு போராட்டக்காரர்களும் அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்கக் கூடாது என்கிற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். 

Tags : Sydney ODI Adani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT