செய்திகள்

சிட்னி ஒருநாள் ஆட்டம்: இந்திய அணியின் சரிவைத் தடுத்து நிறுத்திய பாண்டியா & தவன்

27th Nov 2020 04:32 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறினாலும் ஷிகர் தவனும் பாண்டியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்திய அணி 30 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், ஸ்மித் ஆகியோர் சதமடித்துள்ளார்கள்.

இந்திய அணியின் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே 20 ரன்கள் கிடைத்தது. 4 வைட்களும் ஒரு நோ பாலும் வீசினார் ஸ்டார்க். அடுத்த ஓவரில் மேலும் 12 ரன்கள். இதனால் 4.1 ஓவரிலேயே இந்திய அணி 50 ரன்களை எட்டியது.

ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 22 ரன்களில் ஹேஸில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலி 21 ரன்களிலும் ஷ்ரேயஸ் ஐயர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். பிறகு ஸாம்பா பந்துவீச்சில் 12 ரன்களுடன் ராகுலும் வெளியேற 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷிகர் தவனும் பாண்டியாவும் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அவ்வப்போது சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார் பாண்டியா. இதனால் 31 பந்துகளில் அரை சதமெடுத்தார். தவன் அரை சதமெடுக்க 55 பந்துகள் தேவைப்பட்டன. 

தவனும் பாண்டியாவும் இணைந்து 38 ஒருநாள் ஆட்டங்களில் இணைந்து ஆடினாலும் முதல்முறையாக இம்முறை கூட்டணி அமைத்துள்ளார்கள். 

30 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா 75, தவன் 59 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT