செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக ஆஸி. அணி ரன்கள் குவிப்பு: சதமடித்தார் கேப்டன் ஃபிஞ்ச்

27th Nov 2020 12:28 PM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் சதமடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

மார்ச் மாதத்துக்குப் பிறகு இரு அணிகளும் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி வருகிறார்கள். மைதானத்தின் இருக்கைகள் எண்ணிக்கையில் 50% அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்குத் திரும்பி வருவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 

ஃபிஞ்சும் வார்னரும் முதல் ஐந்து ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தார்கள். இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஷமி நன்றாகப் பந்துவீசினார். இந்த ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை எட்டினார் ஃபிஞ்ச். டேவிட் வார்னருக்கு அடுத்ததாக விரைவாக இந்த இலக்கை எட்டிய 2-வது ஆஸி. வீரர். 

10 ஓவர்களில் 51 ரன்கள் கிடைத்தன. இதன்பிறகும் சிரமம் இல்லாமல் விளையாடினார்கள் ஃபிஞ்சும் வார்னரும். இதனால் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்தது.

அடுத்த ஆறு ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது. எனினும் ரன்களைக் கட்டுப்படுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. 25 ஓவர்களில் ஆஸி. அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்தது. ஃபிஞ்ச் 69 பந்துகளிலும் வார்னர் 54 பந்துகளிலும் அரை சதம் எடுத்தார்கள்.

76 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த வார்னர், ஷமி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

பிறகு வந்த ஸ்மித் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். ஜடேஜாவின் கடைசி ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். 36 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் உயர்ந்தது. இது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்மித்தின் 2-வது விரைவான அரை சதமாகும். 

117 பந்துகளில் சதமடித்தார் ஃபிஞ்ச். இது அவருடைய 17-வது ஒருநாள் சதம். பிறகு 124 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  

40-வது ஓவரின் முடிவில், ஆஸி. அணி 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 63 ரன்களுடன் விளையாடி வருகிறார். 

Tags : India Australia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT