செய்திகள்

என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்: சிராஜ் உறுதி

23rd Nov 2020 05:38 PM

ADVERTISEMENT

 

இந்திய அணிக்காக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்கிற எனது தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் என வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கூறியுள்ளார்.

26 வயது சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு விளையாடி வருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள சிராஜ், ஆஸ்திரேலியாவில் தற்போது அணியினருடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் மரணமடைந்தார். 

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வீரர்கள் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். எனினும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தந்தை மரணமடைந்த நிலையிலும் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் சிராஜால் இந்தியாவுக்குத் திரும்பி, தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது. 

தந்தையை இழந்தது பற்றி பிசிசிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சிராஜ் கூறியதாவது: 

தந்தையின் மரணம் எனக்குப் பெரிய இழப்பு. அவர் தான் எனக்கு ஆதரவு அளித்தவர். இந்திய அணிக்காக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். தந்தையின் கனவை நிறைவேற்றுவேன். 

உயிருடன் இல்லாவிட்டாலும் அவர் என் இதயத்தில் வாழ்கிறார். என் அம்மாவிடம் பேசினேன். என் தந்தையின் கனவை எனக்கு நினைவூட்டினார். இந்திய அணிக்காக நன்கு விளையாட வேண்டும் என்று சொன்னார். 

ஒரு குடும்பம் போல இச்சூழலில் என் அணியினர் எனக்கு ஆதரவளித்தார்கள். இத்தருணத்தில் வலிமையுடன் இருந்து என் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என கேப்டன் கோலி ஊக்கப்படுத்தினார் என்று பேட்டியளித்துள்ளார்.

Tags : Siraj
ADVERTISEMENT
ADVERTISEMENT