செய்திகள்

ஐஎஸ்எல் போட்டி சுமுகமாக நடைபெற்றால் மற்ற போட்டிகளைத் தொடங்க ஊக்கமாக அமையும்: கங்குலி நம்பிக்கை

20th Nov 2020 10:27 AM

ADVERTISEMENT

 

தடங்கல்கள் எதுவும் இன்றி ஐஎஸ்எல் போட்டி நடைபெற்றால் இந்தியாவில் மற்ற போட்டிகளைத் தொடங்க ஊக்கமாக அமையும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 7-ஆவது சீசன் கோவாவில் இன்று தொடங்குகிறது.

பாம்போலிம் நகரில் உள்ள ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் - ஏடிகே மோகன் பகன் அணிகள் மோதுகின்றன. கரோனா நோய்த்தொற்று சூழலில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்க காலகட்டத்தில் நாட்டில் நடத்தப்படும் மிகப்பெரிய அளவிலான முதல் விளையாட்டுப் போட்டி இதுவாகும்.

ADVERTISEMENT

வழக்கமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இப்போட்டி, கரோனா சூழல் காரணமாக இம்முறை கோவாவில் குறிப்பிட்ட நகரங்களுக்குள்ளாக நவம்பா் முதல் மாா்ச் வரை நடத்தப்படுகிறது. அதிலும் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

இந்த சீசனில் ஐஎஸ்எல் போட்டியின் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, ஐ-லீக் போட்டியின் ஏடிகே மோகன் பகன் அணியுடன் இணைக்கப்பட்டு அந்தப் பெயரிலேயே விளையாடுகிறது. புதிதாக எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி இணைந்ததை அடுத்து அணிகளின் எண்ணிக்கை 11 ஆகியுள்ளது. 

எஃப்சி கோவா, ஏடிகே மோகன் பகான், பெங்களூா் எஃப்சி, ஜாம்ஷெட்பூா் எஃப்சி, சென்னையின் எஃப்சி, மும்பை சிட்டி எஃப்சி, ஒடிஸா எஃப்சி, நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, கேரளா பிளாஸ்டா்ஸ், ஹைதராபாத் எஃப்சி, எஸ்சி ஈஸ்ட் பெங்கால் ஆகிய 11 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன. 

கடந்தமுறை சென்னையின் எஃப்சி அணியைத் தோற்கடித்து 3-வது பட்டத்தை வென்றது கொல்கத்தா எஃப்சி அணி. சென்னை அணி 2015, 2017 ஆகிய வருடங்களில் கோப்பையை வென்றுள்ளது. 

இந்நிலையில் ஐஎஸ்எல் போட்டி பற்றி பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:

கிரிக்கெட் போட்டி இப்போதுதான் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக கால்பந்துக்கான நேரம் தொடங்கியுள்ளது. ஐஎஸ்எல் போட்டியை நான் மிகவும் ரசிப்பேன். கொல்கத்தாவில் பிறந்ததால் இளம் வயதில் கால்பந்து ஆட்டங்களைத்தான் அதிகம் பார்த்துள்ளேன். ஐஎஸ்எல் போட்டி தொடங்கியது முதல் ஏடிகே அணியின் ரசிகராக உள்ளேன். 

தடங்கல்கள் எதுவும் இன்றி ஐஎஸ்எல் போட்டி நடைபெற்றால் இந்தியாவில் மற்ற போட்டிகளைத் தொடங்க அது ஊக்கமாக இருக்கும். கிரிக்கெட்டில் உள்ளூர் போட்டிகளை ஜனவரி முதல் தொடங்கவுள்ளோம். ஐஎஸ்எல் போட்டி சுமுகமாக நடைபெற்றால் எங்களுக்கு அது பாதுகாப்பு உணர்வை அளிக்கும். கரோனா பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருப்பதால் ஐஎஸ்எல் போட்டி நன்றாகவே நடைபெறும். 

ஐஎஸ்எல் போட்டியைப் படிப்படியாகப் பெரிதாக்க வேண்டும். அது நிச்சயம் நடக்கும். இப்போட்டிக்கு 10 வருடங்களை அளிக்க வேண்டும். பிறகு இதன் வளர்ச்சி பற்றி பேசுவோம் என்றார். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ஐஎஸ்எல் ஆட்டங்களை ரசிகர்கள் காணலாம்.

Tags : Sourav Ganguly
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT