இந்தியா முழுக்க கரோனா அச்சுறுத்தல் நிலவும் இத்தருணத்தில் முன்னாள் வீரர் கபில் தேவ் என்ன செய்கிறார்?
கரோனா ஊரடங்கு சமயத்தில் தான் எவ்வாறு வாழ்ந்து வருகிறேன் என்பதை ஃப்ரைடே இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார் கபில் தேவ். அவர் கூறியதாவது:
நான் தில்லியில் உள்ள எனது இல்லத்தில் வசித்து வருகிறேன். என் செல்ல நாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அதுதான் கடந்த ஒரு மாதத்தில் வீட்டை விட்டு நான் வெளியே வந்த தருணம்.
ஊரடங்கு தொடங்கிய பிறகு வீட்டுக்குள் என்ன செய்யவேண்டும் எனத் தெரியாமல் இருந்தோம். பிறகுதான் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருப்பதுதான் இப்போதைய தேவை என்பதை நான், என் மனைவி, மகள் ஆகிய மூவரும் புரிந்துகொண்டோம். நம் மூளை வலுவானது என்பதால் புதிய சூழலுக்கு ஏற்ப அழகாகத் தன்னை மாற்றிக்கொள்கிறது. முன்பு குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவிட மாட்டேன். இப்போது நிலைமை மாறிவிட்டது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக அலுவலகத்துக்குச் செல்வதில்லை. வீட்டிலிருந்தே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன். என் அலுவலக ஊழியர்களைப் பற்றி கவலையாக உள்ளது. அதேபோல அவர்களையும் குடும்பத்தினரையும் இச்சமயத்தில் எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதிலும் அக்கறை செலுத்தினேன். அவர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளம் சென்றுவிடவேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன்.
கரோனாவால் கோல்ப் விளையாடவும் முடியவில்லை. கடந்த 15-20 வருடங்களாக உடற்பயிற்சியில் கவனமில்லாமல் இருந்தேன். இப்போது அதில் அதிகக் கவனம் செலுத்துகிறேன். தோட்ட வேலைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறேன். 40 வருடங்களுக்கு முன்பு தில்லிக்கு வந்துவிட்டேன். இப்போதுதான் தெளிவான வானத்தையும் பறவைகளின் சத்தத்தையும் கேட்கிறேன். முன்பை விடவும் இயற்கையை ரசிக்கிறேன் என்றார்.