செய்திகள்

மீண்டும் இப்படிச் செய்தால் முகத்தில் குத்து விடுவேன்: பார்தீவ் படேலை மிரட்டிய மேத்யூ ஹேடன்

8th May 2020 12:26 PM

ADVERTISEMENT

 

2004-ல் பிரிஸ்பேனில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணி 304 ரன்கள் குவித்தது. லக்‌ஷ்மண் 103 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஹேடன், சதமடித்தார். எனினும் அவர் 109 ரன்களில் இர்பான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் மட்டும் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் இடம்பெற்ற விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் மாற்று வீரராக இருந்தார். இடைவேளையில் இந்திய அணிக்கு தண்ணீர், குளிர்பானங்கள் கொண்டு செல்லும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அப்போது நடைபெற்ற சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் பார்தீவ் படேல் கூறியதாவது:

ADVERTISEMENT

ஹேடன் சதமடித்தாலும் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அவரை வீழ்த்தினார் இர்பான் பதான். அப்போதைய இடைவேளையில் அணியினருக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றேன். என் எதிரே ஆட்டமிழந்து வந்துகொண்டிருந்த ஹேடனைப் பார்த்து ஹூஹூ... எனக் கத்தினேன். இதனால் ஹேடன் மிகவும் கோபமடைந்தார். ஓய்வறையின் முன்பு எனக்காகக் காத்திருந்தார். பிறகு திரும்பி வந்த என்னைப் பார்த்து, அது போல மீண்டும் செய்தால் உன் முகத்தில் குத்துவேன் என்றார். மன்னித்துக்கொள்ளுங்கள் என்று அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்.

பிரிஸ்பேனில் அவர் என்னைக் குத்துவிட விருப்பப்பட்டாலும் ஐபிஎல் போட்டியில் இருவரும் நண்பர்கள் ஆனோம். சிஎஸ்கேவுக்காக இருவரும் இணைந்து பல ஆட்டங்களில் விளையாடினோம். ஐபிஎல் போட்டி முடிந்தபிறகு இந்திய ஏ அணி சார்பாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றோம். என் வீட்டுக்கு என்னை அழைத்து, சிக்கன் பிரியாணி சமைத்துக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

Tags : Parthiv Patel
ADVERTISEMENT
ADVERTISEMENT