செய்திகள்

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் ஃபிக்ஸிங்கா?: விசாரணை செய்யவுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு!

20th Jun 2020 11:05 AM

ADVERTISEMENT

 

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாக இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியதையடுத்து, இதுதொடர்பாக விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது.

ஆனால், 2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது என இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தநந்தா குற்றம் சாட்டியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது. நான் சொல்வதில் உறுதியாக உள்ளேன். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது இது நடைபெற்றது.

நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு விவரங்களை நான் வெளியிட மாட்டேன். இதைப் பொறுப்புணர்வுடன் கூறுகிறேன். இதுகுறித்த விவாதத்துக்கும் நான் தயாராக உள்ளேன். மக்கள் அந்த ஆட்டத்தின் முடிவைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இதில் கிரிக்கெட் வீரர்களை நான் தொடர்புபடுத்தி பேசமாட்டேன். ஆனால் சிலர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் கட்டாயமாக ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

இலங்கையின் முன்னாள் அமைச்சரே இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருப்பது இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மஹிந்தநந்தாவின் குற்றச்சாட்டுக்கு 2011 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்கக்காரா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அவர் கூறுவதால் ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்குச் சென்று ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் அவர்களும் விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் சொல்வது உண்மையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் 2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளதையடுத்து இதுதொடர்பாக விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு. விளையாட்டுத்துறை செயலாளர் ருவாண்சந்திரா கூறியதாவது:

மேட்ச் ஃபிக்ஸிங் புகார் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் துல்லாஸ் உத்தரவிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சிறப்புப் புலனாய்வுக் குழு இதுகுறித்து விசாரிக்கும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT