100-வது சதத்தைத் தடுத்து, சச்சினை ஆட்டமிழக்கச் செய்ததால் எனக்கும் நடுவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன என இங்கிலாந்து முன்னாள் வீரர் டிம் பிரெஸ்னன் கூறியுள்ளார்.
2011-ல் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சச்சின் டெண்டுல்கர். பிரெஸ்னன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் சச்சின் ஆட்டமிழந்ததாக கள நடுவர் ராட் டக்கர் அறிவித்தார். ஆனால் பந்து, லெக் ஸ்டம்பை உரசிச் செல்வதைத் தொலைக்காட்சிகளில் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். அந்த ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் அது சச்சினின் 100-வது சதமாக இருந்திருக்கும். எனினும் 2012 மார்ச் மாதத்தில் வங்கதேசத்துக்கு எதிராகச் சதமடித்து தனது 100-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் சச்சின்.
ஓவல் டெஸ்ட் பற்றி பிரெஸ்னன் ஒரு பேட்டியில் கூறியதாவது:
அப்போது 99 சதங்களை சச்சின் எடுத்திருந்தார். அந்த டெஸ்ட் தொடரில் டிஆர்எஸ் தேவையில்லை என பிசிசிஐ கூறிவிட்டது. லெக் ஸ்டம்பைத் தவறவிட்ட அந்த பந்தில் சச்சின் ஆட்டமிழந்ததாக நடுவர் ராட் டக்கர் தீர்ப்பளித்தார். சதமடிக்கும் முனைப்பில் இருந்தார் சச்சின். ஆனால் அவரை ஆட்டமிழக்கச் செய்த காரணத்துக்காக எனக்கும் நடுவர் ராட் டக்கருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. எனக்கு ட்விட்டரிலும் ராட் டக்கருக்கு வீட்டுக்குக் கடிதம் மூலமாகவும் மிரட்டல்கள் வந்தன. நீ எப்படி சச்சினுக்கு அவுட் கொடுக்கலாம், பந்து லெக் ஸ்டம்பைத் தவறவிடுகிறது என நடுவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது என்றார்.