செய்திகள்

3-வது டெஸ்டில் வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

28th Jul 2020 08:50 PM

ADVERTISEMENT


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் எடுத்திருந்தது. 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. வோக்ஸ் மற்றும் பிராட் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதைத் தொடர்ந்து அந்த 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. 

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், பிராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டுவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராடும், மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸும் தொடர் நாயகன் விருதை வென்றனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இங்கிலாந்து அணி 3-வது இடத்தில் உள்ளது.

Tags : ENG vs WIN
ADVERTISEMENT
ADVERTISEMENT