செய்திகள்

200 ரன்களுக்குள் இலக்கு: ஒருமுறை கூட தோற்காத மேற்கிந்தியத் தீவுகள் அணி!

13th Jul 2020 01:39 PM

ADVERTISEMENT

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட 200 ரன்களுக்குள்ளான இலக்கை அடைய முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருமுறை கூட தோற்றதில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

செளதாம்ப்டனில் இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த புதன் அன்று தொடங்கியது. மழை காரணமாக முதல் நாளன்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, ஹோல்டரின் அசத்தலான பந்துவீச்சால் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹோல்டர் 6 விக்கெட்டுகளும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பிறகு ஆடிய மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்ததன் மூலம் 114 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் ஓரளவு சிறப்பாக விளையாடி 313 ரன்கள் எடுத்தது. கிராவ்லி 76 ரன்கள் எடுத்தார். சிப்லி அரை சதம் எடுத்தார். கேப்ரியல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

முதல் டெஸ்டில் வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 64.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து முதல் டெஸ்டில் வெற்றியடைந்தது. பிளாக்வுட் 95 ரன்கள் எடுத்தார். கேப்ரியல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் ஜூலை 16 அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட 200 ரன்களுக்குள்ளான இலக்கை அடைய முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒருமுறை கூட தோற்றதில்லை. இந்தப் புள்ளிவிவரம் பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே 200 ரன்களுக்குள்ளான இலக்கை அடைய முடியாமல் இதுவரை தோற்றதில்லை. ஆனால் இந்த இலக்கை வங்கதேசம் இருமுறையும் ஆப்கானிஸ்தான்  ஒருமுறையும் மட்டுமே எதிர்கொண்டுள்ளன. 

எனினும், மேற்கிந்தியத் தீவுகள் அணி, இதுவரை 61 முறை 200 ரன்களுக்குள்ளான இலக்கைப் பெற்று அதில் 55 முறை வென்றுள்ளது. 6 ஆட்டங்களை டிரா செய்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT