செய்திகள்

முதல் டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வென்றது இலங்கை

23rd Jan 2020 09:21 PM

ADVERTISEMENT


ஜிம்பாப்வேவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஹராரேவில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி மேத்யூஸ்ஸின் இரட்டைச் சதத்தால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 515 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஜிம்பாப்வே அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 13 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்ததால் இலங்கை அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த மிக எளிய வெற்றி இலக்கை இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒஷாடா பெர்னான்டோ மற்றும் கேப்டன் கருணாரத்னே 3வது ஓவரின் முடிவிலேயே எட்டி இலங்கை அணியை வெற்றி பெறச் செய்தனர். 

ADVERTISEMENT

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரட்டைச் சதம் அடித்த ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளும் விளையாடும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் ஹராரேவில் வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT