செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஓர் ஆச்சர்யம் உண்டு: விராட் கோலி

8th Jan 2020 11:43 AM | எழில்

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

குவாஹாட்டியில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் ஆட்டம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 142/9 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர் 3-23 விக்கெட்டுகளையும், சைனி 2-18, குல்தீப் 2-38, பும்ரா, சுந்தர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. இந்தியத் தரப்பில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 6 பவுண்டரியுடன் 45 ரன்களையும், ஷிகர் தவன் 32 ரன்களும் எடுத்தார்கள். ஷ்ரேயஸ் ஐயர் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 34 ரன்களும் கேப்டன் விராட் கோலி 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 17 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. கடைசி டி20 ஆட்டம் வெள்ளியன்று புணேவில் நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டியளித்ததாவது:

ஒரேமாதிரியான பந்துவீச்சுத் திறமை கொண்ட வீரர்களைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்களிலிருந்து மூத்த வீரர்களைத் தேர்வு செய்வீர்கள். ஆஸ்திரேலிய செல்லக்கூடிய வீரர்களில் ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. அவர் அதிவேகமாகப் பந்துவீசி, பவுன்சர்களையும் நன்கு வீசக்கூடியவர் என்றார். நேற்று, இந்திய வேகப்பந்துவீச்சாளர் சைனி சிறப்பாகப் பந்துவீசியதால் அவரைக் குறிப்பிட்டே கோலி பேசினார். மேலும் அவர் கூறியதாவது:

சைனி ஒருநாள் கிரிக்கெட்டிலும் நுழைந்துள்ளார். டி20-யில் நம்பிக்கையுடன் பந்துவீசுகிறார். அதிவேகப் பந்துவீச்சில் யார்க்கர்களையும் பவுன்சர்களையும் கொண்டு பேட்ஸ்மேன்களை வீழ்த்துகிறார். இது அணிக்கு நல்ல அறிகுறியைத் தருகிறது.

உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் பிரஷித் கிருஷ்ணா நன்றாகப் பந்துவீசி வருகிறார். எல்லா வகை கிரிக்கெட் ஆட்டங்களுக்கான பந்துவீச்சாளர்களைக் கொண்டிருப்பது வசதியாக உள்ளது. உலகக் கோப்பையைப் பார்க்கும்போது, நம்மிடம் போதுமான பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்று பேசினார். 

Tags : World T20
ADVERTISEMENT
ADVERTISEMENT