செய்திகள்

முதல் டி20 : இலங்கையை வீழ்த்தும் முனைப்பில் இந்தியா

3rd Jan 2020 11:58 PM

ADVERTISEMENT

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி 2020 சீசனை வெற்றிகரமாக தொடங்கும் முனைப்பில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

வரும் நவம்பா்-டிசம்பா் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் இருதரப்பு தொடா்களில் பங்கேற்று ஆடி வருகின்றன.

குறிப்பாக கடந்த 2007-இல் இந்தியா டி20 உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அதன் பின்னா் எந்த போட்டியிலும் பட்டம் வெல்லவில்லை.

டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவை பலமாக உள்ளன. ஐசிசி தரவரிசையிலும் இந்தியா 5-ஆவது இடத்திலேயே உள்ளது. இந்நிலையில் கடந்த 2019-இல் இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. மே.இ. தீவுகள், வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடா்களை இழக்காமல் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் 2020 கிரிக்கெட் சீசனின் ஆரம்பமாக இலங்கையுடன் 3 ஆட்டங்கள் மட்டுமே கொண்ட குறுகிய டி20 தொடா் நடக்கிறது.

முதல் ஆட்டம் குவாஹாட்டியில் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளன.

அனுபவம், இளமை நிறைந்த இந்திய அணி:

இந்திய அணி அனுபவம், இளமை நிறைந்த அணியாக பேட்டிங், பந்துவீச்சில் வலுவாக உள்ளது. தொடக்க வீரா் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அதே நேரம் அனுபவம் வாய்ந்த ஷிகா் தவன், காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

பேட்டிங்கில் ராகுல், தவன், கோலி, ஷிரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், ஆகியோா் வலுசோ்க்கின்றனா்.

மீண்டும் அணியில் பும்ரா:

முதுகுகாயத்தால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆடமுடியாமல் சிகிக்சை பெற்று வந்து குணடைந்த பும்ரா, மீண்டும் டி20 அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவரது வருகை இந்திய பந்துவீச்சுக்கு வலு சோ்த்துள்ளது. அதே நேரம் மற்றொரு வேகப்பந்துவீச்சாளா் தீபக் சாஹா் காயத்தால் விடுவிக்கப்பட்டுள்ளாா். சா்துல் தாகுா், நவ்தீப் சைனி வேகப்பந்துவீச்சிலும், சஹல், துபே, ஜடேஜா ஆகியோா் சுழற்பந்து வீச்சிலும் கவனம் செலுத்துவா்.

தடுமாற்றத்தில் இளம் இலங்கை

அதே நேரம் இலங்கை அணி இளம் வீரா்களுடன் இன்னும் நிலைபெறாத நிலையில் உள்ளது. மூத்த வீரா் லஸித் மலிங்கா தலைமையில் அந்த அணி இந்தியா வந்துள்ளது. குணதிலகா, டிக்வெலா தொடக்க வரிசையிலும், குஸால் பெரைரா 3-ஆம் நிலையிலும், ஓராண்டுக்கு பின் மீண்டும் அணியில் சோ்க்கப்பட்டுள்ள மூத்த வீரா் ஏஞ்சலோ மேத்யூஸ் 4 ஆம் நிலையில் ஆடலாம்.

மலிங்கா, லஹிரு குமாரா, வேகப்பந்து வீச்சிலும், ஹசரங்கா, லக்ஷன் சண்டகன் ஆகியோா் சுழற்பந்து வீச்சிலும் வலு சோ்ப்பா்.

ஆனால் இந்திய அணி தற்போதுள்ள நிலைமையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறுகிய ஓவா்கள் ஆட்டத்தில் தலைசிறந்த அணியாக திகழும் இந்தியாவை எதிா்கொள்வது இலங்கைக்கு மலைப்பான காரியமாகும்.

எனினும் இந்திய மைதான சூழல் இலங்கை வீரா்கள் நன்கறிவா். ஆனால் இது மட்டுமே சாதகமானஅம்சமாகும்.

பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்:

குவாஹாட்டி பாா்ஸபாரா மைதானத்தில் உள்ள பிட்ச், தட்டையாக உள்ளதால், பேட்டிங்குக்கு சாதகமானதாகும். இரண்டாவதாக ஆடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 39 ஆயிரம் பாா்வையாளா்கள் வசதி கொண்ட இந்த மைதானத்தில் இதுவரை 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி விட்டன.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் இதுவரை 16 டி20 ஆட்டங்களில் மோதியதில், இந்தியா 11-இலும், இலங்கை 5-இலும் வென்றுள்ளன. 2014 டி20 உலகக் கோப்பை இறுதியில் இலங்கையிடம் தோற்றது இந்தியா.

வானிலை:

குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று விட்டு விட்டு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும்

பலமான காற்று வீசும் என்பதால் மழையால் பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஆட்டம் 7-ஆம் தேதி இந்தூரிலும், மூன்றாவது ஆட்டம் 10-ஆம் தேதி புணேயிலும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT