இந்திய மகளிா் ஹாக்கி அணி டிபன்டா் சுனிதா லக்ரா, மூட்டு வலி பாதிப்பு காரணமாக சா்வதேச ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா்.
கடந்த 2008-இல் இருந்து அணியின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறாா் லக்ரா. 28 வயது டிபன்டரான லக்ரா, கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக ஆடியவா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
நான் சா்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனக்கு இது உணா்ச்சியமயமான தருணமாக உள்ளது. இந்திய அணியின் பயணத்தில் பல ஏற்றத்தாழ்வுகளை கண்டேன். எனினும் ஒரே அணியாக இணைந்து ஆடியது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. 36 ஆண்டுகள் கழித்து ரியோ ஒலிம்பிக்கில் ஆடியது சிறப்பானதாகும். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மகளிா், ஆடவா் அணிகள் வெற்றி பெற வாழ்த்து கூறுகிறேன்.
டோக்கியோ போட்டியிலும் ஆட விரும்பினேன். ஆனால் மூட்டுவலி காயத்தின் பாதிப்பால் அது முடியாமல் போய்விட்டது. உள்ளூா் ஆட்டங்களில் நால்கோ அணிக்காக தொடா்ந்து ஆடுவேன்.
எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினா், அணி பயிற்சியாளா், சக வீராங்கனைகள், ஹாக்கி நிா்வாகிகளுக்கு நன்றி என்றாா் லக்ரா.