செய்திகள்

சென்னையில் நடைபெறும் ஐஎஸ்எல் அரையிறுதி ஆட்டம்: டிக்கெட் விற்பனை விவரங்கள்!

26th Feb 2020 05:28 PM | எழில்

ADVERTISEMENT

 

ஐஎஸ்எல் போட்டியில், சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாகக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது சென்னையின் எஃப்சி அணி. 

இரண்டு முறை இந்திய சூப்பர் லீக் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி, இந்த சீசனின் அரையிறுதி ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளன

அரையிறுதியில் சென்னையின் எஃப்சி உள்ளூர் ஆட்டம், பிப்ரவரி 29 அன்று சனிக்கிழமை மாலை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்கள் விலை ரூ. 250 முதல் விற்பனைக்கு உள்ளது.

ADVERTISEMENT

அடுத்த ஆட்டம் கோவாவில் ஒரு வாரம் கழித்து இரு அணிகளுக்கிடையே மார்ச் 7-ம் தேதி நடைபெறும். 

ரசிகர்கள் டிக்கெட்டுகளை 'புக் மை ஷோ' செயலி வலைத்தளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இல்லாவிட்டால், ஜவஹர்லால் நேரு மைதானத்தின் கேட் 10-ல் உள்ள 'புக் மை ஷோ' பாக்ஸ் அலுவலகத்தில் பிப்ரவரி 28 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நேரில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

பிப்ரவரி 29 அன்று, அதாவது ஆட்டம் நடைபெறும் நாளன்று 'புக் மை ஷோ' பாக்ஸ் அலுவலகம், ஜவஹர்லால் நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் கேட் 1-க்கு மாற்றப்படும். அங்கு டிக்கெட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மார்ச் 14 அன்று ஐஎஸ்எல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பட்டம் வெல்லும் அணி 2021-இல் நடக்கவுள்ள ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடக்க சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.

இந்த வருடப் போட்டியில் ஒருகட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது சென்னை அணி. அதன் ரசிகர்கள் மிகவும் வெறுத்துப்போனார்கள். ஐஎஸ்எல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை விட்டு, கடைசி இடத்துக்குக் கீழிறங்கியது. 2019-20 சீசனில் புதிய வீரா்கள் சோ்க்கப்பட்டு அணிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து ஐஎஸ்எல் பட்டம் வென்று கொடுத்த ஜான் கிரகோரி, தற்போதைய நிலைமையை உணர்ந்து பதவி விலகினார். முதல் ஆறு ஆட்டங்களில் 3-ல் தோற்று இரண்டை டிரா செய்து ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்ததால் நெருக்கடி காரணமாக கிரகோரி பதவி விலகினார். அயர்லாந்து அணிக்காக விளையாடிய ஓவன் கோயல் புதிய பயிற்சியாளராகத் தேர்வானார். 

முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்த சென்னை அணி, அதன்பிறகு விளையாடிய 14 ஆட்டங்களில் 8-ல் வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஓர் ஆட்டம் மீதமுள்ள நிலையில் சென்னை அணி அரையிறுதிக்குத் தகுதியடைந்தது.

Tags : ISL
ADVERTISEMENT
ADVERTISEMENT